டாஸ்மாக் முடிஞ்சு.. என்னோட அடுத்த டார்கெட் FL-2 பார் தான்! ஆக்‌ஷனில் இறங்கிய அமைச்சர் விக்னேஷ்!

திண்டுக்கல்: கடந்த ஆட்சி காலத்தில் FL-2 மதுபானக்கூடங்களுக்கு அதிக அளவில் அனுமதி கொடுத்த காரணத்தினால் முறைகேடு அதிகம் நடக்கிறது எனவும், விரைவில் FL2 மதுபானக் கூடங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் பொறுப்பு அமைச்சரும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சருமான விக்னேஷ் கூறியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்களை மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை துறை திண்டுக்கல் பொறுப்பு அமைச்சர் விக்னேஷ் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் விக்னேஷ் கூறியதாவது,” திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நிலக்கோட்டை, ஆத்தூர், வத்தலகுண்டு பகுதிகளை இன்று பார்வையிட்டேன். அந்தப் பகுதிகள் இன்றளவும் மிகவும் பின்தங்கியே உள்ளது.

இங்கு உள்ள முன்னாள் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியை மட்டுமே பார்த்துள்ளார்கள் போலும். மாவட்டத்தின் வளர்ச்சியை பற்றி அவர்கள் கண்டு கொள்ளவில்லை. டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தற்போது வழங்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் டாஸ்மாக் கடைகளில்
இனி கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்றால் சம்பந்தப்பட்ட கடை ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் பணியாளர்கள் குறித்து புகார் தெரிவிக்க தனி whatsapp எண் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு வருகிறார். இனி வரும் காலங்களில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படும் புகார்கள் அதிக அளவில் வரும் மாவட்டங்களில் பணிபுரியும் டாஸ்மாக் மேலாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிக அளவில் லஞ்சம் கிடைக்கும் என்ற ஒரே நோக்கத்துடன் கடந்த காலங்களில் அதிக அளவில் fl2 பார்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. த.வெ.க ஆட்சி பொறுப்பு ஏற்ற பின்னர் ஒரு fl2 பாருக்கு கூட அனுமதி கொடுக்கவில்லை. இந்த பார்களில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாக தொடர்ந்து புகார் வருகிறது.

அடுத்த கட்டமாக fl2 பார்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறோம். தமிழக வெற்றி கழகத்தை பொருத்தவரை யார் தவறு செய்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திமுக, அதிமுக போன்று கட்சி நிர்வாகிகளை த.வெ.க ஒருபோதும் காப்பாற்றாது. இவ்வாறு பேசினார்.