லண்டனிலும் “அப்பாவைக் காணோம், finished” செய்கை செய்த முதல்வர் விஜய்! ஆணவம் என நெட்டிசன்கள் கண்டனம்

லண்டன்: லண்டனில் தன்னை பார்க்க வந்த ரசிகர்களுக்கு “அப்பாவை காணோம், ஃபினிஷ்டு” சைகைகளை முதல்வர் விஜய் காட்டியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆணவத்தின் உச்சம் என நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.

அரசு முறை பயணமாக இங்கிலாந்து சென்ற முதல்வர் விஜய், தமிழகத்திற்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதோடு சர்வதேச விளையட்டு உள்கட்டமைப்புகளையும் நேரில் பார்வையிட்டார்.

இங்கிலாந்தின் சர்வதேச அளவில் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தய களத்தில் இந்த ஆண்டுக்கான மிச்செலின் லீ மான்ஸ் கப் எனும் கார் பந்தயம் நடைபெற்று வருகிறது.

இந்த பந்தயத்தின் 5ஆவது சுற்றின் நேற்று நடந்தது. இதில் ஆசிய பிரதிநிதியாகவும் சிறப்பு அழைப்பாளராகவும் பங்கேற்ற முதல்வர் விஜய் பச்சைக் கொடியை அசைத்து விளையாட்டு பந்தயத்தை தொடங்கி வைத்தார்.

திரைத்துறையில் 34 ஆண்டுகளுக்கும் மேலாக இரு துருவங்களாக கருதப்பட்ட விஜய்யும் அஜித்தும் சர்வதேச விளையாட்டுக் களம் ஒன்றில் இணைந்து இருப்பது இரு ரசிகர்களிடமும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த கார் ரேஸ் போட்டியில் 44 பந்தயக் கார்கள் பங்கேற்றன. முன்னதாக அஜித்தை பார்க்க ரேஸ் நடக்கும் மைதானத்திற்கு வந்த விஜய், அஜித்தை பார்த்ததும் ஓடிச் சென்று கட்டியணைத்து முத்தமிட்டார்.

இதையடுத்து அஜித் குமார் இயக்கும் LMP3 Pro/Am பிரிவில் Ajith RedAnt by Virage அணியின் சார்பில் 16 ஆம் எம் கொண்ட Ligier என்ற பந்தயக் காரை இயக்குகிறார். இந்த போட்டியில் அஜித்துடன் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பந்தய வீரர் ரோமைன் வோஸ்னியாக் பங்கேற்றார். அப்போது அஜித்தின் ரேஸ் காரில் அமர்ந்து விஜய் போஸ் கொடுத்தார். அஜித்திற்கு கை கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தார்.

மேலும் தனது ரேஸ் காரை எப்படி இயக்குவது என்பதையும் விஜய்க்கு அஜித் சொல்லிக் கொடுத்தார். சிறிது நேரம் கழித்து விஜய்யும் கார் ரேஸ் பந்தய உடையிலும் ஹெல்மெட் அணிந்தும் வந்திருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.

பின்னர் அஜித்தும் விஜய்யும் தேசிய கொடியை பறக்கவிட்டு போட்டோ எடுத்துக் கொண்டனர். இந்த கார் பந்தயத்தில் அஜித்தின் கார் மாறி மாறி கார் ஓட்டும் பிரிவில் 3 ஆவது இடத்தை பிடித்தது.

இந்த நிலையில் விஜய் தங்கியிருந்த இடத்திற்கு அவரை பார்க்க நிறைய ரசிகர்கள் வந்திருந்தனர். அப்போது பால்கனியில் நின்றிருந்த அவர், ரசிகர்களை பார்த்து “அப்பாவைக் காணோம், ஃபினீஷ்டு” என்ற செய்கையை காட்டினார். மேலும் இதய வடிவ சின்னத்தையும் காட்டினார்.

இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அதாவது முதல்வர் ஆகிவிட்டோம், இனி யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற ஆணவத்தில் விஜய் இது போல் செய்கிறார் என்றும் எல்லா விஷயத்திலும் சினிமாத்தனத்தை கொண்டு வந்துள்ளார் என்றும் விமர்சித்து வருகிறார்கள்.

ஏற்கெனவே சட்டசபையில் மேற்கண்ட சைகைகளை செய்ததற்கு தவெகவின் கூட்டணி கட்சியினரே முகம் சுளித்தனர். அத்துடன் மிசா காலத்தில் ஸ்டாலினின் தாடை உடைக்கப்பட்டது குறித்து ஒரு சைகையை செய்தது திமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக மிசா சட்டத்தில் கைதாகி எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர், எத்தனையோ பேர் தங்கள் வாழ்க்கையை இழந்துள்ள நிலையில் அத்தனை பேரின் தியாகத்தையும் விஜய் கிண்டலுக்குள்ளாக்கியுள்ளார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.