அனுமதியின்றி திமுகவினர் போராட்டம்: ஆ.ராசா, மா.சுப்பிரமணியன் மீது வழக்குபதிவு

சென்னை: தமிழக முதல்வர் விஜயை கண்டித்து, திமுகவினர் போராட்டம் நடத்திய நிலையில், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக ஆ.ராசா எம்,பி, முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியின் உள்ளிட்ட திமுகவினர் மீது சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் திமுக தலைவர் ஸ்டாலின், மறைந்த தலைவர் கருணாநிதி குறித்து முதல்வர் விஜய் விமர்சித்து பேசியதை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் நேற்று(செப். 12,) மிகப்பெரிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திமுகவினர் மீது காவல்துறை தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளது.

கடந்த செப். 7 அன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் விஜய், திமுகவின் முந்தைய ஆட்சி கால ஊழல்கள், சர்க்காரியா கமிஷன் அறிக்கை மற்றும் அவசரநிலை பிரகடனத்தின் போது ஸ்டாலின் மிசா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டது குறித்து கடுமையாக விமர்சித்தார். மேலும், அவர் செய்த சில உடல் சைகைகள் ஸ்டாலினின் தியாகத்தை அவமதிக்கும் வகையில் இருந்ததாக திமுக குற்றம் சாட்டியது.

முதல்வரின் இந்தப் பேச்சை கண்டித்து, திமுக மாவட்ட செயலாளர்கள் தலைமையில் செப். 12 அன்று தமிழகத்தின் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களிலும் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

இதனையடுத்து,பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், உரிய முன் அனுமதி பெறாமலும் இந்த போராட்டங்களை முன்னெடுத்ததாகக் கூறி, சென்னை தெற்கு, தென்மேற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link