சென்னை: திமுக ஆட்சியில் பவர்ஃபுல் அமைச்சராகவும், இந்து சமய அறநிலையையும் கவனித்து வந்தவர் பிகே சேகர்பாபு. தமிழக முழுவதும் உள்ள கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தியவர். எந்த கோயிலுக்கு சென்றாலும் ஸ்பெஷல் மரியாதை வழங்கப்படுவது வழக்க. ஆனால் ஆட்சி மாறிய பிறகு காட்சிகளும் மாறிவிட்டது .திருத்தணியை தொடர்ந்து திருவண்ணாமலை சென்ற சேகர் பாபுவுக்கு விஐபி தரிசனம் மறுக்கப்பட்டு பொது தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
2021 சட்டமன்றத் தேர்தலில் வென்று திமுக ஆட்சி அமைத்ததும் சேகர்பாபுவுக்கு இந்து சமய அறநிலையத்துறை பொறுப்பு வழங்கப்பட்டது. பல்வேறு முக்கிய துறைகள் இருக்கும் நிலையில் எதற்காக இந்த பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது என பலரும் கேள்வி எழுப்பினர்.
ஆனால் அதில் தான் ஸ்கோர் செய்து காட்டினார் சேகர்பாபு. தமிழக முழுவதும் இருந்த கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டதோடு, பல்வேறு கோவில்கள் உலகத்தரம் வாய்ந்த அளவுக்கு வசதிகள் உயர்த்தப்பட்டது. குறிப்பாக பழனி, திருவண்ணாமலை, திருச்செந்தூர் ஆகிய கோயில்கள் பக்தர்கள் வசதிக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கப்பட்டது.
அது மட்டுமல்லாமல் 1000க்கும் மேற்பட்ட சிறிய பெரிய கோயில்களின் கும்பாபிஷேகங்களையும் நடத்திக் காட்டினார். இதை அடுத்து முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் ஒன்றாக இந்து சமய அறநிலையத்துறை மாறியது. சேகர்பாபுவின் செயல்பாடுகளை பார்த்து பாராட்டிய அப்போதைய முதல்வர் முக ஸ்டாலின் சென்னை பெருநகர வளர்ச்சிக்கு குழுமமான சிம்டிஏவின் பொறுப்பையும் தந்தார். அது மட்டுமல்லாமல் சென்னையின் கட்சிப் பொறுப்பும் ஆட்சிப் பொறுப்பும் கிட்டத்தட்ட அவரிடம் தான் இருந்தது என்றே சொல்லலாம்.
2026 சட்டமன்ற தேர்தலில் சென்னையில் உள்ள 2 தொகுதிகள் தவிர்த்து அனைத்திலும் திமுக தோல்வியை சந்தித்தது. இரண்டே பேர் தான் வெற்றி பெற்றனர். அதில் ஒருவர் சேகர் பாபு. முதல்வர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் பாபு வென்றிருந்தார். இந்த நிலையில் ஆட்சி மாறினால் ஆட்சி மாறும் என்பது போல கும்பாபிஷேக விழாக்களிலும் கோவில் நிகழ்ச்சிகளிலும் முதல் மரியாதை பெற்று வந்த சேகர் பாபு தற்போது சாதாரண மக்கள் போல பொது தரிசனம் செய்து வருகிறார்.
கடந்த ஆடி கிருத்திகை அன்று திருத்தணி முருகன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சேகர்பாபு தனது ஆதரவாளர்களுடன் சென்றார். ஆனால் ஷேர்பாபுவின் வாகனத்தை மலைக்குச் செல்ல அனுமதி மறுத்த போலீசார் சிறப்பு தரிசனத்திற்கும் மறுத்தனர். பின்னர் உயர் அதிகாரிகள் தலையிட்டு சேகர் பாபு தரிசனம் செய்ய வைத்தனர். தற்போது அதே நிலை தான் திருவண்ணாமலையிலும் ஏற்பட்டிருக்கிறது.
நேற்று தனது துணைவியார் உடன் சேகர்பாபு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரை தரிசிக்க சென்றார் வடக்கு கோபுரம் வழியாக சென்ற அவர் சம்பந்த விநாயகரை தரிசித்து விட்டு விஐபி தரிசனத்திற்கு செல்ல நீண்ட நேரமாக காத்திருந்தார். ஆனால் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளோ கோயில் ஊழியர்களோ யாரும் வரவில்லை. நீண்ட நேரம் காத்திருந்தும் யாரும் வராததால் ஏமாற்றம் அடைந்த அவர் பொது தரிசனம் கியூ லைன் வழியாக உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்த பின்னர்தான் அர்ச்சகர்கள் அவர்களுக்கு பிரசாதம் வழங்கி மாலை அணிவித்தனர்.
தற்போது இந்தியா முழுவதும் அண்ணாமலையார் கோவில் பிரபலமாகி வரும் நிலையில், தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், நடிகர் நடிகைகள் என பலரும் கோவிலுக்கு வருகின்றனர். அவர்களுக்கு கோவில் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டு சிறப்பு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் சேகர் பாபுவை வேண்டுமென்றே காத்திருக்க வைத்ததாக திமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர். அதே நேரத்தில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தரப்பில் மற்றொரு விளக்கமும் சொல்லப்படுகிறது.
அதாவது திருத்தணி விவகாரத்தின் போது விஐபிகள் தரிசனம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு வெளியிட்டிருந்தது. அதாவது பிரபலங்கள் வருவதற்கு முன்பு ஒரு நாளைக்கு முன்பே ஆணையாளர் அலுவலகத்திற்கு தகவல் சொல்ல வேண்டும், கோவிலுக்குள் புகைப்படம் வீடியோ எடுக்க கூடாது, பொதுமக்களின் தரிசனத்திற்கு இடையூறு செய்யக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதிகாரிகளுக்கு முன்னரே சொல்லாமல் திடீரென சேகர்பாபு வந்ததால் தான் அவரை சிறப்பு தரிசனத்தில் அனுமதிக்கவில்லை எனவும், முன்னரே தகவல் சொல்லி இருந்தால் நிச்சயம் சிறப்பு தரிசனத்தில் அனுமதித்திருப்போம் என்கின்றனர்.
