இடதுசாரிகள் அதிரடி அறிவிப்பு ; 5 முனை போட்டிக்குத் தயாராகும் இடைத்தேர்தல்!

தமிழகத்தில் ஏழு சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் மாதம் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அன்று நடைபெறும் வாக்குப்பதிவு வரும் அக்டோபர் 9ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.

இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என திமுக, அதிமுக, தவெக, நாதக உள்ளிட்ட கட்சிகள் தீவிர முனைப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், திமுக, அதிமுக, தவெக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. கூட்டணி கட்சிகளும் தங்களது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றன

இதற்கிடையில், இடதுசாரி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பது கடந்த சில நாட்களாக எதிர்பார்ப்பு கிளம்பியது. குறிப்பாக தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவிக்கும் இரு கட்சிகளும், தவெக கூட்டணியிலும் அமைச்சரவையிலும் இடம்பெறப் போவதில்லை என வெளிப்படையாக அறிவித்தது. தவெக தரப்பில் கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டப் போதிலும் அந்த அழைப்பை ஏற்க மறுத்தது.

இந்த சூழ்நிலையில், இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து இரு கட்சிகளும் நிர்வாகிகளுடன் ஆலோசித்து வந்தது. அதன்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தலைமையில் நேற்று மாநில நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், இடைத்தேர்தலில் இரு தொகுதிகளிலும் இடதுசாரிகள் போட்டியிடவுள்ளதாக இருகட்சிகளும் அறிவித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மு.வீரபாண்டியன், “ஏற்கெனவே நாங்கள் முடிவெடுத்தபடி நாங்கள் எந்த கூட்டணியிலும் இடம்பெறப் போவதில்லை. அமைச்சரவையில் நாங்கள் பங்கேற்கவில்லை, கூட்டணியிலும் பங்கேற்கவில்லை. இந்த இடைத்தேர்தல் இயல்பானதாக இல்லை, திணிக்கப்பட்ட தேர்தல். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்த இடைத்தேர்தலில் எதிர்கொள்ள முடிவு செய்திருக்கிறோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இதே நிலையை எடுத்திருக்கிறது. தாராபுரம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவது என்றும் மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவது என்றும் முடிவாகியிருக்கிறது” என்று கூறினார். 

இதற்கிடையில் திருச்சியில் மார்கிசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் நிர்வாகக் குழு கூட்டம் இன்று (13-09-26)நடைபெற்றது. அங்கு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பெ.சண்முகம், “மதுராந்தம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் இடதுசாரிகள் சார்பில் தனித்து போட்டியிட முடிவு செய்திருக்கிறோம். இரு கட்சிகளும் 15ஆம் தேதி சென்னையில் வேட்பாளர்களை அறிவிப்போம். திமுக, அதிமுக, தவெக என எந்த அணியிலும் இடதுசாரிகள் இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1 தொகுதியிலும், இந்திய கம்யூனிஸ்ட் 1 தொகுதியிலும் போட்டியிட இருக்கிறோம்” என்று கூறினார். ஏற்கெனவே தவெக, திமுக, அதிமுக, நாதக என 4 முனை போட்டி இருந்த நிலையில், இடதுசாரிகளின் இந்த அறிவிப்பால் இடைத்தேர்தலில் 5 முனை போட்டி நிகழ்ந்துள்ளது. 

Source link