பெங்களூர்: பாம்புகள் என்றாலே, பார்த்ததை எல்லாம் அப்படியே விழுங்கும் பழக்கம் கொண்டதுதான். அதிலும் ராஜநாகம் என்றால் சொல்லவே வேண்டாம். கர்நாடாகவில் ராஜநாகம் ஒன்று மலை பாம்பை முழுசாக விழுங்கி, ஆள் நடமாட்டத்தை பார்த்தவுடன் அதை அப்படியே வாந்தி எடுத்திருக்கும் சம்பவம் மக்களிடையே பேசுபொருளாகியுள்ளது.
ராஜநாகத்திற்கு ‘Ophiophagus’ என்று பெயர். இதற்கு ‘பாம்பு தின்னி’ என்று அர்த்தம். பெயருக்கு ஏற்றார் போல, ராஜநாகம் எதை பார்த்தாலும் லபக் என விழுங்கிடும். அப்படித்தான் மலைபாம்பையும் இது முழுங்கியிருக்கிறது.
கர்நாடகாவின் பெல்தங்கடி தாலுகாவில் உள்ள தென்ககாரந்தூர் கிராமத்தில் இந்த சம்பவம் செப்.11 அன்று மாலை நடந்திருக்கிறது. அங்குள்ள ஒரு குடும்பத்தினர், தங்களது வீட்டு தோட்டத்தில் பிரம்மாண்டமான ராஜநாகம் ஒன்று மலைப்பாம்பை விழுங்கிக்கொண்டிருப்பதை நேரில் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் அசோக் என்கிற உள்ளூர் பாம்பு பிடி வீரருக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர்.
அசோக் அங்கு வந்து பார்த்தபோது, குடும்பத்தினர் சொன்னது உண்மைதான் என்பதை தெரிந்துக்கொண்டார். இப்போது இந்த பாம்பை பிடித்து பாதுகாப்பான இடத்தில் விட வேண்டும். பொறுமையாக பாம்பை பிடிக்க அவர் முயன்றார். ஆனால், பாம்பு பிடி கொடுக்காமல் நழுவிக்கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் பாம்பு தப்பிக்க முடியாமல் ஒரு மூலையில் லாக் ஆகிவிட்டது. எனவே, தான் விழுங்கிய மலைப்பாம்பை அது வாந்தி எடுக்க தொடங்கியது.
பாம்புகள் இப்படி சிக்கிக்கொண்டால், அது விழுங்கிய உணவை வாந்தி எடுத்துவிட்டு அங்கிருந்து தப்பித்துவிடும். உணவை வயிற்றில் வைத்திருந்தால், அதனால் வேகமாக நகர முடியாது. எனவேதான் இப்படி செய்கிறது. ராஜநாகமும் அதைத்தான் செய்தது. முழுமையாக வாந்தி எடுத்த பிறகு வேகமாக அங்கிருந்து தப்பிக்க முயன்றது. ஆனால் அசோக் அதற்குள் ராஜநாகத்தை லாவகமாக பிடித்து பின்னர், பாதுகாப்பான வனப்பகுதியில் அதை விடுவித்தார்.
பாம்புகள், இன்னொரு பாம்பை சாப்பிடுவது வழக்கம்தான். இருந்தாலும், மலைபாம்பை சாப்பிடுவது சாதாரண விஷயம் கிடையாது. அது சுற்றி வளைத்து நெருக்கினால், மூச்சுவிட முடியாமல் ராஜநாகம் இறந்து போயிருக்கும். இருப்பினும் இதையெல்லாம் தாண்டி, மலைபாம்பை கொன்று ராஜநாகம் விழுங்கியிருக்கிறது. ராஜநாகம் வழக்கமா இப்படி செய்யாது என்பதால் உயிரியலாளர்கள் இதை ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.
