தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டி: இடதுசாரிகள் அறிவிப்பு

சென்னை / திருச்சி: தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டி என இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் தவெக ஆட்சி அமைக்க இடதுசாரிகள் ஆதரவு அளித்த நிலையில், வரவிருக்கும் இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு இல்லை என்ற நிலைப்பாட்டோடு தனித்து போட்டியென்றும் முடிவு எடுத்துள்ளனர்.

தமிழக சட்​டப்​பேர​வை​யில் காலி​யாக உள்ள தொகு​தி​களில், மதுராந்​தகம் மற்​றும் தாராபுரம் தொகு​தி​களுக்கு அக்​.6-ம் தேதி இடைத்​தேர்​தல் நடை​பெறவுள்​ளது. திமுக, அதி​முக, தவெக ஆகிய பிர​தானக் கட்​சிகள் தங்​களது வேட்​பாளர்​களை அறி​வித்துள்​ளன. கூட்​ட​ணிக் கட்​சிகளும் தங்​களது ஆதரவை வெளிப்​படுத்தி வரும் நிலை​யில், இடது​சாரி கட்​சிகளான இந்​திய கம்​யூனிஸ்ட் மற்​றும் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சிகளின் நிலைப்​பாடு என்ன என்​பது பெரும் எதிர்​பார்ப்பை ஏற்​படுத்​தி இருந்தது.

இந்நிலையில், தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இத்தொகுதியில் 4 முனைப்போட்டி என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இடதுசாரிகள் போட்டியிடுவது தேர்தல் களத்தை இன்னும் பரபரப்பாக்கியுள்ளது.

இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியின் பேசுகையில், “தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுராந்தகம் பற்றி சிபிஎம் மாநிலச் செயலாளர் அதிகாரபூர்வமாக அறிவிப்பார்.

இந்த இடைத்தேர்தலில் இடதுசாரிகளுக்கு பல்வேறு ஜனநாயக சக்திகளும் ஆதரவு அளிக்கும் என்று நம்புகிறோம். தமிழ் மண்ணில் ஜனநாயகத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 60, 70 ஆண்டுகளாக பெரும் பங்களிப்பு செய்திருக்கிறது. சட்டமன்ற நாடாளுமன்ற விழுமியங்கள் எப்போதும் கட்டிக் காத்துள்ளது.

இப்போதுள்ள அரசியல் சூழலில் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று முடிவு செய்துள்ளோம். அதனால் இடதுசாரிகள் தனித்து களம் காண்கிறோம். வேட்பாளர்கள் அறிவிப்பு செப்.15 அன்று இருக்கும்.” என்றார்.

“தவெகவுக்கு ஆதரவு இல்லை என்பதால்…”

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேசுகையில், “இந்த இடைத்தேர்தல் திணிக்கப்பட்ட தேர்தல். அதிமுகவில் வென்ற இரண்டு எம்எல்ஏக்களும் 20 நாட்களில் அந்தப் பதவியை ராஜினாமா செய்ததில் எந்தவித நியாயமும் இருக்க முடியாது. இது ஆரோக்கியமற்ற அரசியலுக்கே வழிவகுக்கும் இதை நாங்கள் ஏற்கெனவே கண்டித்திருக்கிறோம்.

தமிழக முதல்வர் அந்நிய முதலீட்டை ஈர்ப்பதற்காகவே லண்டன் சென்றதாகச் சொன்னார்கள். அந்நிய முதலீடுகளை ஈர்ப்பது இருக்கட்டும், பட்ஜெட்டில் உள்நாட்டு சிறு குறு தொழில்களை பாதுகாக்கும் அறிவிப்பும் இல்லை. அந்நிய முதலீடே எல்லா பிரச்சினையையும் தீர்க்காது.

தவெக அரசுடன் எங்களுக்கு நிறைய வேறுபாடுகள் இருக்கிறது. சட்டப்பேரவை ஜனநாயகப்பூர்வமாக மக்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பேசும் இடமாக இருக்க வேண்டும். இடதுசாரி எம்எல்ஏக்கள் மக்களுக்காக குரல் கொடுத்ததை மக்கள் பார்த்திருப்பார்கள். இப்போது 4 இடதுசாரி எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்தத் தேர்தலில் போட்டியிடுவது என்பது இடதுசாரிகளை சட்டப்பேரவையில் வலுப்படுத்தும் முயற்சி. இடதுசாரிகளுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். எங்கள் குரல் மக்களுக்காக இன்னும் வலுவாக ஒலிக்க வேண்டும்.

அதனால்தான், இடைத்தேர்தல் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டு இடதுசாரிகள் தனித்துப் போட்டி என்று முடிவு எட்டப்பட்டது.

இந்தத் தேர்தலில் ஏற்கெனவே மூன்று அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாங்கள் மூன்று அணிகளிலும் இல்லை. மேலும், இது பொதுத் தேர்தலோ, ஆட்சி மாற்றத்துக்கான தேர்தலோ இல்லை.

இந்த 120 நாட்களில் தவெகவோடு மாறுபடுகிற விஷயங்களை நாங்கள் வெளிப்படையாக தெரிவித்து வருகிறோம். அவர்கள் அதில் சிலவற்றை ஏற்று இருக்கிறார்கள். பலவற்றை ஏற்கவில்லை.

தவெகவுக்கு இடைத்தேர்தலில் ஆதரவு இல்லை. ஆனால் தவெக அரசுக்கு வெளியில் இருந்து எங்களின் ஆதரவு தொடரும். பாஜக எந்தக் காரணத்தாலும் அதிகாரத்துக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக நாங்கள் எடுத்த அந்த அரசியல் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் தவெக ஆட்சிக்கு ஆபத்து இல்லை. அதேபோல், தவெகவுக்கு ஆதரவு இல்லை என்பதால் எங்கள் முடிவை திமுக ஆதரவு நிலைப்பாடு என்று கூறுவதும் தவறு.

இந்த இடைத்தேர்தலில் இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுவதற்கு இடதுசாரிகளின் கருத்தியலை, கொள்கையை மக்களிடம் வலுப்படுத்த வேண்டும் என்பதே காரணம்” என்றார்.

Source link