புதிதாகத் தயாரிக்கப்பட்ட சூடான தேநீரை குடிப்பதற்கு முன் சில நிமிடங்கள் ஆறவிட வேண்டும் என்பதை புதிய ஆராய்ச்சி ஒன்று வலியுறுத்துகிறது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், மிகவும் சூடான பானங்களைக் குடிப்பதற்கும், ‘உணவுக்குழாய் ஸ்கேமஸ் செல் கார்சினோமா’ (Oesophageal Squamous Cell Carcinoma – SCC) என்ற புற்றுநோய் வகைக்கும் இடையே தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
‘சர்வதேச புற்றுநோய் இதழில்’ வெளியிடப்பட்டுள்ள இந்த ஆராய்ச்சிக்காக, இங்கிலாந்து பயோபேங்க் மற்றும் மில்லியன் மகளிர் ஆய்வு ஆகியவற்றின் மூலம் சுமார் 9,77,000 பெரியவர்களின் உடல்நலத் தரவுகள் ஆய்வு செய்யப்பட்டன.
ஆய்வின் முடிவுகளில், வெதுவெதுப்பான பானங்களை விரும்புவோருடன் ஒப்பிடுகையில், சூடான பானங்களை வழக்கமாகக் குடிப்பவர்களுக்கு உணவுக்குழாய் எஸ்சிசி புற்றுநோய் வருவதற்கான ஆபத்து கிட்டத்தட்ட இரு மடங்காக உள்ளது. மிகவும் சூடான பானங்களை விரும்புவோருக்கு இந்த ஆபத்து சுமார் மூன்று மடங்கு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.
இருப்பினும், தேநீர் குடிப்பதாலேயே நேரடியாகப் புற்றுநோய் ஏற்படுகிறது என்று கூற முடியாது; தேநீர் அல்லது காபி எதுவாக இருந்தாலும், பானத்தின் வெப்பநிலையுடன் மட்டுமே இந்தத் தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
வெப்பநிலையின் தாக்கம் என்ன?
சூடான திரவம் நேரடியாக உணவுக்குழாய் வழியாகச் செல்வதால், அது அப்பகுதியில் உள்ள செல்களுக்கு வெப்பக் காயத்தை ஏற்படுத்துகிறது. காலப்போக்கில் மீண்டும் மீண்டும் ஏற்படும் இந்தச் சேதம், புற்றுநோய் உருவாவதற்கான வாய்ப்பை அதிகரிக்கச் செய்யும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இந்தப் புதிய கண்டுபிடிப்புகள் தேநீரைக் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும் என்பதற்கானது அல்ல. உணவுக்குழாய் எஸ்சிசி என்பது ஒப்பீட்டளவில் அரிதான நோயாகும். தேநீர் பிரியர்கள் தங்களது பானத்தைக் குடிப்பதற்கு முன்பு அது ஆறுவதற்கு சிறிது அவகாசம் கொடுப்பது மட்டுமே எளிமையான எச்சரிக்கையாக பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், உணவுக்குழாய் புற்றுநோய் அபாயத்தைத் தவிர்க்க புகைப்பிடிப்பதைத் தவிர்ப்பதும், மது அருந்துவதைக் கட்டுப்படுத்துவதும் மிகமுக்கியமான நடவடிக்கைகளாகும்.
