தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டி: இடதுசாரிகள் அறிவிப்பு; வேட்பாளர்கள் செப். 15-ல் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில் காலியாக உள்ள தொகுதிகளில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கருர், விராலிமலை தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியான தவெகவில் இணைந்தனர்.

இதில் தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ள அம்பாசமுத்திரம், பெருந்துறை, கருர், விராலிமலை மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தேர்தல் வழக்கு நிலுவையில் இல்லாததால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்துள்ளது.

திமுக, அதிமுக, தவெக ஆகிய பிரதானக் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. நாம் தமிழர் கட்சி தேர்தலில் போட்டியிடுவதை உறுதிப்படுத்தியுள்ளது.கூட்டணிக் கட்சிகளும் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி வரும் நிலையில், இடதுசாரி கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், சென்னை பாலன் இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தலைமையில் ஞாயிற்றுக் கிழமை (செப்.13) காலை 10 மணிக்கு தொடங்கிய நிர்வாகக் குழு கூட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு முடிவடைந்தது. ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.வீரபாண்டியன் கூறியதாவது;

”தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தனித்து போட்டியிடவுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவது உறுதி என்றாலும், ஆக்கப்பூர்வமான அறிவிப்பை அச்ச கட்சியின் செயலாளர் பெ. சண்முகம் அறிவிப்பார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் சூழலில் எந்த கூட்டணியிலும் இடம் பெறுவதில்லை என்ற நிலைப்பாடு இப்பொழுது தொடர வேண்டும் என நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது.

முன்பு தமிழ்நாட்டில் ஜனநாயகத்தின் பொருட்டு மக்கள் அளித்த தீர்ப்புக்கு மதிப்பு கொடுத்து, ஆளுநர் ஆட்சி வரக்கூடாது என்பதற்காக தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரிப்போம் என தெரிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தல் இயல்பான இடைத்தேர்தல் ஆக இல்லாமல் திணிக்கப்பட்ட இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இடதுசாரிகள் கூட்டணிக்கு ஜனநாயக சக்திகள் ஆதரவு அளிக்க வேண்டும் . எங்களுக்கு வாய்ப்பளித்தால் ஒடுக்கப்பட்ட எளிய மக்களின் குரலை, தமிழ் மக்களின் நலன் சார்ந்த குரலை சட்டப்பேரவையில் எழுப்புவோம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, லெனினிஸ்ட் கட்சிகள் சேர்ந்து வேட்பாளர்களை வரும் செப். 15 ஆம் தேதி அறிவிப்போம்.  தமிழ்நாடு இனி இடது பக்கம்; மதச்சார்பின்மை சமூக நீதி சோஷலிசம்” என்று வீரபாண்டியன் தெரிவித்தார். 

ஏற்கெனவே இத்தொகுதியில் பலமுனை போட்டி எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இடதுசாரிகளின் இந்த தனித்து போட்டியால் தேர்தல் களம் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Source link