சென்னை: சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து முடிந்த நிலையில், சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தமிழக ஆளுநர் ஆர்லேகரை சந்தித்து பேசியுள்ளார். சட்டசபை செயல்பாடு, ஜனநாயக செயல்முறை குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளன.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழக ஆட்சியின் கீழ் முதல் சட்டசபை கூட்டத்தொடர் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. தமிழகத்தின் 17-வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் மொத்தம் 28 நாட்கள் நடந்தது. இதில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான துறை ரீதியிலான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.
இந்த நிலையில் இன்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தமிழக ஆளுநர் ஆர்லேகரை லோக்பவனில் சந்தித்தார். பொதுவாக ஒரு சட்டசபை கூட்டத்தொடர் நடந்து முடிந்ததும் சட்டசபை செயல்பாடுகள், எப்படி நடந்தது என்பது குறித்து தகவல்களை சபாநாயகர் ஆளுநரிடம் எடுத்து உரைப்பார். இது வழக்கமான சந்திப்பு தான்.
அந்த வகையில் ஜேசிடி பிரபாகர் ஆளுநர் அர்லேகரிடன் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்துள்ளார்.ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டசபை கூட்டத்தொடர், பட்ஜெட் கூட்டத்தொடரும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இது தொடர்பாக இருவரும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சட்டசபை செயல்பாடு, ஜனநாயக செயல்முறை குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளன.
எனினும் பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் அர்லேகரை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றது. தமிழகத்தில் ஆளும் தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி ஆளுநரிடம் புகார் மனு அளித்தன. குதிரை பேர விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநரிடம் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
