பதற்றம் மிகுந்த ஹார்முஸ் ஜலசந்தியில் இன்று காலை ஈரான் வர்த்தக கப்பல் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மூவர் காயம் அடைந்தனர்.
அமெரிக்கா – ஈரான் இடையே ஹார்முஸ் ஜலசந்தி கடல்வழிப்பாதையில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது.
கடந்த சில வாரங்களாக அப்பகுதியில் அமெரிக்க கடற்படை தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது.
மேலும் ஹார்முஸ் வழியே செல்லும் கப்பல்கள் கடும் அச்சறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றன.
இந்த சூழலில், “ஈரான் வர்த்தக கப்பல் ஒன்று இன்று காலை 5 மணியளவில் ஹென்கம் மற்றும் கேஷ்ம் தீவுகளின் கரையையொட்டிய பகுதியில் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. ஒரு நபர் கொல்லப்பட்டார். மூன்று பேர் காயமடைந்தனர்” என கேஷ்ம் நகர ஆளுநர் அமீர் தேமௌரி தெரிவித்ததாக ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த தாக்குதல் எங்கிருந்து யாரால் நடத்தப்பட்டது என்பதை குறிப்பிடவில்லை. நேற்று நள்ளிரவில் கேஷ்ம் பகுதியை சுற்றி பல வெடிப்புகள் பதிவாகி உள்ளது. கேஷ்ம், ஹார்முஸ் பகுதியில் உள்ள மிகப்பெரிய தீவு நகரமாகும்.
முன்னதாக ஈரான் – மத்திய கிழக்கு நாடுகளின் பிரதிநிதிகள் ஓமனில் ஒன்றுகூடி ஹார்முஸ் பிரச்சனைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்திய ஒரு நாளுக்கு பின் இந்த தாக்குதல் வந்துள்ளது. ஹார்முஸ் முடக்கத்தால் சர்வதேச நாடுகளுக்கு எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய கிழக்கு நாடுகள் திணறி வரும் சூழலில், ஹார்முஸ் பகுதியில் போக்குவரத்தை சீரமைக்க, தற்காலிகமான ஒரு பாதையை உருவாக்கும் முயற்சிகள் ஓமன் மத்தியஸ்தத்தில் ஈரான் மற்றும் பிற அரபு நாடுகள் இடையே நடந்து வருகின்றன.
ஹார்முஸ் சிக்கல்
மறுபுறம், ஹார்முஸை தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது. ஹார்முஸுக்கு தனது பெயரை சூட்டுவதும், ஹார்முஸில் பயணிக்க அமெரிக்காவுக்கு கட்டணம் செலுத்தும் முறையை கொண்டுவரப்போவதாக அறிவிப்பதும் என அதிபர் டிரம்ப் பல வழிகளில் அந்த பாதையை சொந்தமாக்கிக்கொள்ள முயற்சி எடுத்து வருகிறார்.
ஆனால் அமெரிக்கா எதிர்பார்த்ததை விட ஈரான் வலுவாக பதிலடி கொடுத்து வருவதால் 6 மாதங்களை கடந்து போர் நீடித்து வருகிறது. அதேநேரம் அமெரிக்க ராணுவம் கடும் பின்னடைவையும் இழப்புகளையும் இந்த போரில் சந்தித்துள்ளது. ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கக்கூடாது என்ற காரணத்திற்காக அமெரிக்கா தொடங்கிய இப்போரின் தற்போதைய பிரதான கவனமாக ஹார்முஸ் மாறியுள்ளது.
இந்த ஜலசந்தியில் நடக்கும் மாற்றங்கள் இந்தியா உட்பட சர்வதேச நாடுகளின் எண்ணெய், எரிவாயு நலன்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த மோதல் உற்று கவனிக்கப்பட்டு வருகிறது.
மறுபுறம், சவுதி அரேபிய ஆதரவுடன் இயங்கும் ஏமன் அரசு படைகளுடன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மோதலில் ஈடுபட்டு மத்திய கிழக்கில் ஹார்முஸுக்கு பிறகு அதிக முக்கியத்துவம் வாய்ந்த பாப் அல் மாண்டேப் ஜலசந்தியை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது நடந்தால் நிலைமை மேலும் மோசமாகும்.
