சென்னை: தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இப்படி ஒரு அநாகரீகமான, ஒரு டம்மி முதல்வரை யாரும் பார்த்ததே கிடையாது என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜய்யை விமர்சித்து பேசினார். மேலும், ஆட்சிக்கு வந்து வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாத டம்மி ஆட்சியாளர்கள், நம் கழகத்தின் மேலேயும், நம்முடைய தலைவர் மேலயும் பல்வேறு அவதூறுகளை ஒவ்வொரு நாளும் கிளப்பிக்கொண்டு இருக்கிறார்கள் என்று கூறினார்.
சென்னை தெற்கு மாவட்டம், வேளச்சேரி மேற்குப் பகுதி திமுக யூத்விங் துணை அமைப்பாளர் தினேஷ் – எலிசபத் மிசெல் திருமண விழாவிற்கு சென்று மணமக்களை வாழ்த்திய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்து பேசினார். அவர் கூறியதாவது:-
76 ஆண்டுகளை நிறைவு செய்து 77-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது நம் திமுக. இந்த 77 ஆண்டுகளில் எத்தனையோ வெற்றிகளையும், எத்தனையோ தோல்விகளையும் நம் கழகம் பார்த்து இருக்கிறது. தேர்தல் வெற்றி தோல்விகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டு எப்போது மக்களோடு இருக்கின்ற இயக்கம் தான் நம் திமுக.
இன்னும் சொல்லப்போனால் கடந்த சட்டசபை தேர்தலில் நாம் வெற்றி வாய்ப்பினை இழந்து இருக்கிறோம். ஆனால் இன்றைக்கு ஒரு சிறப்பான எதிர்க்கட்சியாக, மக்களோடு நிற்கின்ற எதிர்க்கட்சியாக நாம ஒவ்வொருத்தரும் இப்போது செயல்பட்டு கொண்டு இருக்கிறோம். இன்னைக்கு ஒவ்வொரு நாளும் இங்கே இருக்கின்ற டம்மி ஆட்சியாளர்களால், மக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சினை வந்துகொண்டு இருக்கிறது. இன்றைக்கு தமிழ்நாட்டிலே எங்கு பார்த்தாலும் கரண்ட் கட். சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கு என்று நான் சொல்ல தேவையில்லை. அரிசி, பருப்பு என அதோட விலைவாசியும் ஏறிக்கொண்டே இருக்கிறது. ஆனால் இத பத்தியெல்லாம் கேள்வி கேட்டால் இங்கு இருக்கிற முதல்வரால் பதில் அளிக்க முடியல. பதில் சொல்ல முடியாத காரணத்தால் நம் கழகத்தின் மேலேயும், நம்முடைய தலைவர் மேலயும் பல்வேறு அவதூறுகளை ஒவ்வொரு நாளும் கிளப்பிக்கொண்டு இருக்கிறார்கள்.
இன்னைக்கு தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இப்படி ஒரு அநாகரீகமான, ஒரு டம்மி முதல்வரை நாம் அனைவரும் பார்த்ததே கிடையாது. வரலாற்றிலே இது தான் முதல்முறை. ஆட்சிக்கு வரும் போது பல்வேறு வாக்குறுதிகளை சொல்லி ஆட்சிக்கு வந்தாங்க.. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு எதாவது ஒரு திட்டத்தை நிறைவேற்றி இருக்காங்களா? அதுவும் இல்லை.. நாம கொண்டு வந்த, திமுக கொண்டு வந்த திட்டங்கள் எல்லாத்தையும் ஸ்டிக்கர் ஒட்டி அவங்க கொண்டு வந்த மாதிரி பொய்யை பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் அடுத்த கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்த காரணத்தினால் தான், இன்று 2 சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த ஆட்சியாளர்கள் வீழ்ச்சிக்கு இந்த இடைத்தேர்தல் வெற்றி ஒரு தொடக்கமாக இருக்க வேண்டும். அதற்கான உறுதிமொழியை நாம எடுத்துக்கொள்ள வேண்டும். இங்க இருக்கக்கூடிய ஆட்சியாளர்களுக்கு, டம்மி முதல்வருக்கு நாம எல்லாரும் சேர்ந்து ஒரு சரியான பாடத்தை புகட்ட வேண்டும்.
மணமக்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள்.. ஒருவரை ஒருவர் புரிஞ்சி நல்ல நண்பர்களாக நடந்துக்கோங்க.. சுயமரியாதையோடு விட்டுக்கொடுக்காமல் இணைந்து வாழுங்கள். உங்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு தமிழ் மொழியில் பெயர் வையுங்கள்.. என அனைவருக்கு வாழ்த்து தெரிவித்து விடைபெறுகிறேன்” என்றார்.
