தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுகின்றன. இதன் மூலம் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி ஆகியவற்றுடன் இடதுசாரிகளும் களத்தில் இருப்பதால் தேர்தல் போட்டி 5 முனைப்போட்டியாக விரிவடைந்துள்ளது. இடதுசாரிகளின் தற்போதைய நிலைப்பாட்டில் முக்கியமாக கவனிக்கப்படுவது, தவெக அரசுக்கு அளிக்கும் ஆதரவும், இடைத்தேர்தலில் தவெகவுக்கு எதிராக போட்டியிடுவதும்தான்.
ஆட்சிக்கு ஆதரவு..ஆளுங்கட்சிக்கு எதிராக போட்டி
ஒரு ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிப்பது என்பதால், அந்த அரசின் அனைத்து முடிவுகளையும் ஆதரிக்க வேண்டிய வேண்டிய அவசியமில்லை. ஆட்சியில் இருக்கும் கட்சியின் கொள்கைகள் மற்றும் திட்டங்களில் தங்களுக்கு உடன்பாடு இல்லாத விஷயங்களை ஆதரவு தரும் கட்சிகள் விமர்சிப்பது அரசியலில் புதிதல்ல. அதேபோல், தேவையான நேரங்களில் அரசின் மீது அழுத்தம் கொடுப்பதும் கூட்டணி அல்லது ஆதரவு அரசியலில் நடைபெறக்கூடிய ஒன்றுதான்.
ஆனால், ஒரு பக்கம் தவெக அரசுக்கு ஆதரவு தொடரும் என்று அறிவித்துவிட்டு, மறுபக்கம் அதே கட்சியின் வேட்பாளர்களுக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டு வாக்கு கேட்பது மக்களிடம் எவ்வாறு புரிந்து கொள்ளப்படும் என்பதே தற்போது எழுந்துள்ள முக்கியமான கேள்வியாக உள்ளது.
குழப்பமான அரசியல் நிலைப்பாடா?
இடதுசாரிகளின் இந்த முடிவை விமர்சிப்பவர்கள், இது ஒரு வகையானஇரட்டை நிலைப்பாடு என்று கூறுகின்றனர். தவெக அரசு மீது விமர்சனங்கள் இருந்தால், அந்த விமர்சனங்களை வெளிப்படையாக முன்வைத்து ஆட்சிக்கு அளிக்கும் ஆதரவை மறுபரிசீலனை செய்யலாம். ஆனால் ஆதரவு தொடரும் என்று கூறிக்கொண்டே, அதே அரசுக்கு எதிராக தேர்தலில் களம் காண்பது எந்த அரசியல் நோக்கத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு என்ற கேள்வியும் எழுகிறது.
குறிப்பாக, இடைத்தேர்தல் என்பது ஒரு அரசின் செயல்பாடுகளுக்கு மக்கள் அளிக்கும் அரசியல் மதிப்பீடாகவும் பார்க்கப்படும் சூழலில், தவெக அரசுக்கு ஆதரவு தரும் கட்சியே தவெக வேட்பாளர்களுக்கு எதிராக வாக்கு கேட்பது வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துமா என்பதும் கவனிக்கப்படுகிறது.
தவெக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியா?
இடதுசாரிகள் இந்த முடிவை தவெக அரசுக்கு அரசியல் அழுத்தம்கொடுக்கும் வகையில் எடுத்துள்ளனரா என்ற கேள்வியும் எழுகிறது. ஆட்சிக்கு தேவையான ஆதரவை தொடர்ந்து வழங்கிக்கொண்டே, தேர்தல் களத்தில் தனியாக போட்டியிடுவதன் மூலம் தங்களது அரசியல் வலிமையை நிரூபிக்க அவர்கள் முயற்சி செய்கிறார்களா என்பதும் விவாதிக்கப்படுகிறது.
அதேநேரத்தில், இதன் பின்னணியில் ஏதேனும் அரசியல் அழுத்தம் அல்லது நிர்பந்தம் இருந்ததா என்பதை உறுதியாகக் கூற முடியாது. இடதுசாரி கட்சிகள் தங்களது முடிவுக்கான காரணத்தை தெளிவாக விளக்கினால் மட்டுமே இதுகுறித்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். பிரச்சாரத்தின்போது அதை அவர்கள் விளக்கக் கூடும் என்று எதிர்பார்க்கலாம்.
திமுகவுக்கும் ஆதரவு இல்லை என விளக்கம்
அதேசமயம், தவெகவுக்கு எதிராக போட்டி என்பதற்காக இதனை திமுகவுக்கான ஆதரவாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் இடதுசாரிகள் தெரிவித்துள்ளனர். மூன்று பிரதான அரசியல் அணிகளுக்கும் எதிராகவே தாங்கள் போட்டியிடுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதன் மூலம் திமுகவுடனான பாரம்பரிய அரசியல் உறவைத் தாண்டி, தனித்த அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் முயற்சியிலும் இடதுசாரிகள் ஈடுபட்டுள்ளனரா என்ற கேள்வி எழுகிறது.
வாக்காளர்கள் எப்படி பார்க்கிறார்கள்?
எந்த அரசியல் கட்சியின் முடிவாக இருந்தாலும் அதன் உண்மையான தாக்கம் தேர்தல் களத்தில்தான் தெரியும். இடதுசாரிகளின் வேட்பாளர்கள் எவ்வளவு வாக்குகளைப் பெறுகிறார்கள், அந்த வாக்குகள் எந்தக் கட்சியின் வெற்றி வாய்ப்பை பாதிக்கின்றன என்பதும் முக்கியமாக இருக்கும்.
குறிப்பாக, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் வெற்றி–தோல்வி குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அமையும் பட்சத்தில், இடதுசாரிகள் பெறும் வாக்குகளும் முக்கியத்துவம் பெறலாம். அப்படி நடந்தால் எதிர்காலத் தேர்தல்களில் தவெகவிடம் சீட் கேட்டு இடதுசாரிகள் நெருக்கடி தரக் கூடும் என்றும் கணக்கு போடப்படுகிறது.
ஆட்சிக்கு ஆதரவு அளிப்பது, ஆட்சியின் செயல்பாடுகளை விமர்சிப்பது, அதே ஆட்சிக்கு எதிராக இடைத்தேர்தலில் போட்டியிடுவது என மூன்று வெவ்வேறு நிலைப்பாடுகளை ஒரே நேரத்தில் எடுத்துள்ள இடதுசாரிகளின் அரசியல் வியூகம், இந்த இடைத்தேர்தலில் எந்த அளவுக்கு வாக்காளர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்பதே தற்போது கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.
.
