10வது மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் கடந்த மாதம் 28 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, ஹாங்காங் மற்றும் குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா என மொத்தம் 8 அணிகள் இடம்பெற்றன.
இதில் குரூப் ஏ பிரிவில் முதல் இந்தியா, பாகிஸ்தானும், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசமும் அரையிறுதிக்கு முன்னேறின.
இதில் முதல் அரையிறுதி போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதேபோல், 2-வது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப் போட்டி: இந்தியா – இலங்கை மோதல்
இந்நிலையில், மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
2024 தோல்விக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?
இந்தியா – இலங்கை அணிகள் மகளிர் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக சந்திக்கின்றன. 2022-ல் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், 2024-ல் இலங்கை இந்தியாவை வீழ்த்தி முதல்முறையாக ஆசியக் கோப்பையை வென்றது. தற்போது நடப்பு சாம்பியனாக இருக்கும் இலங்கை, பட்டத்தைத் தக்கவைக்க முயற்சிக்கிறது. அதேவேளையில், இந்திய அணி 2024-ம் ஆண்டு ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து கோப்பையை மீண்டும் கைப்பற்றும் முனைப்பில் களமிறங்குகிறது. எனவே, இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
இரு அணி வீராங்கனைகள் பட்டியல்
இந்திய மகளிர் அணி: ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, பிரதிகா ராவல், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), தீப்தி ஷர்மா, பார்தி ஃபுல்மாலி, பிரேமா ராவத், ஸ்ரீ சரணி, கிராந்தி கவுட், நந்தனி ஷர்மா, ரேணுகா சிங் தாக்கூர், ராதா யாதவ், அருந்ததி ரெட்டி மற்றும் குணானு கமலினி.
இலங்கை மகளிர் அணி: சாமரி அத்தபத்து (கேப்டன்), இமேஷா துலானி, சஞ்சனா கவிந்தி, ஹாசினி பெரேரா, ஹர்ஷிதா சமரவிக்ரம, கவிஷா தில்ஹாரி, நிலக்ஷிகா சில்வா, கௌஷானி நுத்யங்கனா (விக்கெட் கீப்பர்), சுகந்திகா குமாரி, சாமுதி பிரபோதா, மிதாலி கவுயங்கா, விஷ்மி கவ்யங்கா, விஷ்மி அயோத்தியா, சேதன விமுக்தி
