சென்னை: விஏஓ, சார்பதிவாளர் செய்த காரியங்களால், கள்ளக்குறிச்சி டூ ஈரோடு வரை ஒரே பரபரப்பாக உள்ளது. ஊழல், லஞ்சத்தை 100 நாட்களில் ஒழிப்போம் என்று கூறி தவெக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கப்படுவதாக கூறப்படும் சம்பவங்கள் வெளியாகியபடி உள்ளன. லஞ்சம் தர முடியாமல் பொதுமக்களின் அவஸ்தை ஒருபுறம், லஞ்சம் கேட்பதாக கூறப்படும் அதிகாரிகளை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைதுகள் மறுபுறம் என தொடர்கின்றன. அந்த வகையில், ஈரோட்டிலும் கள்ளக்குறிச்சியிலும் அடுத்தடுத்து நடந்த 2 சம்பவங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.
ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே ராயர்பாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்.. இவர் கவுந்தப்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில், தனது பத்திரத்தை கிரையம் செய்வதற்காக அணுகியிருக்கிறார்.
ஈரோடு, கள்ளக்குறிச்சி
அதற்கு சார்பதிவாளர் சங்கர் ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கார்த்திகேயன் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். டிஎஸ்பி சாந்தி தலைமையிலான போலீசார் திட்டமிட்டு கண்காணித்த நிலையில், ரூ.7 லட்சம் பணத்துடன் கார்த்திகேயன் அலுவலகத்துக்கு சென்றார். அப்போது பத்திர எழுத்தர் வெற்றி மூலம் அந்த பணத்தை சங்கர் பெற்றுள்ளார்.. இதையடுத்து மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 2 பேரையும் செய்து, அந்த அலுவலகத்தில் வைத்தே விசாரணையை மேற்கொண்டனர்.
உளுந்தூர்பேட்டை பஸ் ஸ்டாண்டு
இதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடந்த இன்னொரு சம்பவம் லஞ்சத்தின் கொடுமையை வேறு விதமாக வெளிப்படுத்தியுள்ளது.
எலவனாசூர்கோட்டை அருகே கீழப்பாளையத்தைச் சேர்ந்த அப்துல்சலீம் ஷேக், தனது மனைவி தாஹிரோனின் பெயரை குடும்பத்துக்கு சொந்தமான நிலத்தின் கூட்டு பட்டாவில் சேர்க்க கடந்த மார்ச் மாதம் விஏவிடம் மனு அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் பெயரை சேர்க்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம் விஏஓ.
தன்னிடம் பணம் இல்லாததால் லஞ்சம் கொடுக்க முடியாத நிலைக்கு சென்றுள்ளார் அப்துல சலீம் ஷேக்.. இதற்காக, உளுந்தூர்பேட்டை பஸ் ஸ்டாண்டில் கூலிங் கிளாஸ், ஜீன்ஸ் பேன்ட், சட்டை அணிந்து டிப்டாப்பாக கையில் தட்டு ஏந்தி பொதுமக்களிடம் பிச்சை கேட்டார்.
“வாழ்க தமிழ், ஒழியட்டும் ஊழல்” என்ற வாசகத்துடன், பூர்வீக சொத்தில் கூட்டு பட்டாவில் பெயர் சேர்க்க விஏஓ லஞ்சம் கேட்கிறார், ஆனால், என்னிடம் பணம் இல்லை என்பதால் பிச்சை எடுக்கிறேன்” என்ற பதாகையையும் வைத்திருந்தார்.
கூலிங் கிளாஸ், ஜீன்ஸ் பேன்ட், சட்டை
கூலிங் கிளாஸ், ஜீன்ஸ் பேன்ட், சட்டை அணிந்து அப்துல் சலீம் பிச்சைக்கேட்ட இந்த வீடியோதான், இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
ஒருபுறம் ரூ.7 லட்சம் லஞ்சம் பெற்றதாக அதிகாரி கைது, மறுபுறம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுக்க முடியாமல் ஒருவர் பொதுமக்களிடம் பிச்சை எடுக்கும் நிலை. ஊழலை ஒழிப்பதாக கூறப்படும் சூழலில், இதுபோன்ற சம்பவங்கள் அரசு அலுவலகங்களில் லஞ்சம் எந்த அளவுக்கு குறைந்துள்ளது என்ற கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளன..
