தென்காசி மாவட்டம் வேட்டைக்காரன்குளம் அழுதகண்ணி ஆற்றுக்குள் பாய்ந்து அரசு பேருந்து ஒட்டுநர் உட்பட 30 பயணிகள் பலத்த காயம். கிராம மக்கள், தீயணைப்புத்துறையினர் காவல்துறையினர் பேரூந்துக்குள் சிக்கியவர்களை துரிதமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தென்காசி பணிமனைக்கு சொந்தமான அரசு பேருந்து இன்று (13.09.2026) காலை 7.30 மணி அளவில் தென்காசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து 32க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நெல்லை நோக்கி அரசு பேருந்து புறப்பட்டுச் சென்றது. பேருந்தை ஒட்டுநர் சிவசக்தி ஒட்டிச் சென்றார். நடத்துநர் இசக்கிமுத்து பயணிகளிடம் டிக்கெட் கொடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. தென்காசியில் இருந்து முக்கிய நிறுத்தங்களில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சுமார் மூன்று கிலோமீட்டர் சென்ற நிலையில் வேட்டைக்காரன்குளம் கிராமத்தை அடுத்த அழுதகன்னி ஆற்றுப் பாலம் அருகே உள்ள ஒரு வளைவில் திரும்பும் போது பஸ்ஸிலிருந்து பெரிய சத்தம் கேட்டது என கூறப்படுகிறது.
இதில் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஆற்றுக்குள் தலை குப்புறக் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. பேருந்து பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு வேட்டைக்காரன்குளம் கிராம பொதுமக்கள் மற்றும் சாலையில் சென்றவர்கள் உடனடியாக தீயணைப்புத்துறை, காவல்துறை, 108 ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் கொடுத்ததுடன் பேருந்துக்குள் சிக்கித் தவித்தவர்களைப் பொதுமக்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்குத் தென்காசி தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்து பேருந்துக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பேருந்தின் அடிப் பகுதியில் சிக்கித் தவித்தவரைத் தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டியும் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் பத்திரமாக வெளியே மீட்டனர்.
இந்த விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் சிவசக்தி மற்றும் நடத்துநர் இசக்கிமுத்து உள்ளிட்ட 28 பயணிகளுக்கும் தலை கை கால்கள், என பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்து நடந்த ஆற்றில் தற்போது தண்ணீர் இல்லாததால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து குற்றாலம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பாகக் காணப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
