நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையரில் ரிபாகினா முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். பைனலில் சபலென்காவை வீழ்த்தினார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் ‘நம்பர்-1’ பெலாரசின் சபலென்கா 28, ‘நம்பர்-2’ வீராங்கனை, கஜகஸ்தானின் எலினா ரிபாகினா 27, பலப்பரீட்சை நடத்தினர். கடந்த 2013க்குப் பின், யு.எஸ்., ஓபன் பைனலில் தரவரிசையில் முதல் இரு இடத்தில் இருந்த வீராங்கனைகள் மோதினர்.
இதற்கு முன் இருவரும் மோதிய 17 போட்டிகளில் சபலென்கா 10ல் வென்றிருந்தார். இதனால் ‘நடப்பு சாம்பியன்’ சபலென்கா வெற்றி பெறுவார் என நம்பப்பட்டது. மாறாக, முதல் செட்டை சபலென்கா 4-6 என இழந்தார். இரண்டாவது செட் 5-5 என இழுபறியாக நீடித்தது. பின் சுதாரித்துக் கொண்ட சபலென்கா, அடுத்தடுத்து இரண்டு ‘கேம்களை’ கைப்பற்றினார். இரண்டாவது செட்டை 7-5 என வசப்படுத்தினார்.
கலைந்த கனவு
வெற்றியாளரை முடிவு செய்த மூன்றாவது செட்டில் துவக்கத்தில் இருந்தே சபலென்கா (2-3) பின்தங்கினார். மறுபக்கம் நிதானமாக செயல்பட்டார் ரிபாகினா. தனது துல்லியமான, வேகமான ‘சர்வீஸ்’களால், சபலென்காவை திணறடித்தார். தொடர்ந்து மூன்று ‘கேம்களை’ கைப்பற்ற, மூன்றாவது செட்டை 6-2 என எளிதாக கைப்பற்றினார்.
2 மணி நேரம், 23 நிமிடம் நடந்த போட்டி முடிவில் ரிபாகினா, 6-4, 5-7, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
சபலென்காவின் ‘ஹாட்ரிக்’ கோப்பை வெல்ல வேண்டும் என்ற கனவு தகர்ந்தது. தவிர, இத்தொடரில் தொடர்ந்து 19 போட்டியில் சாதித்த, இவரது வெற்றிநடை முடிவுக்கு வந்தது.
‘நம்பர்-1’ இடம்
யு.எஸ்., ஓபனில் சாம்பியன் ஆன ரிபாகினா, 1760 புள்ளிகள் கூடுதலாக பெற்றார். இதையடுத்து, டபிள்யு.டி.ஏ., ஒற்றையர் பிரிவு தரவரிசையில் முதன் முறையாக ‘நம்பர்-1’ இடம் பிடித்தார். பைனலில் வீழ்ந்த சபலென்கா, 700 புள்ளிகளை இழக்க, இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். 99 வாரம் முதலிடத்தில் இருந்த சபலென்கா ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.
மூன்றாவது கோப்பை
கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 2022ல் விம்பிள்டன் கோப்பை வென்றார் ரிபாகினா. பின், நடப்பு ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன், யு.எஸ்., ஓபன் பைனலில் சபலென்காவை சாய்த்த இவர், இதுவரை 3 கிராண்ட்ஸ்லாம் கோப்பை கைப்பற்றியுள்ளார்.
