புதுடில்லி: முதல் ‘டி-20’ போட்டியில் அபிஷேக் சர்மா 82 ரன் விளாச, இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சுலபமாக வென்றது.
இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 ‘டி-20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி டில்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்தது. இந்திய ‘லெவனில்’ 15 வயது வைபவ் சூர்யவன்ஷி இடம் பெறவில்லை. சஞ்சு சாம்சன் வாய்ப்பு பெற்றார். ‘டாஸ்’ வென்ற கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.
இந்திய அணியின் அபார பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அதிர்ந்தது. பும்ரா வீசிய முதல் ஓவரில் குர்பாஸ் (0) வெளியேறினார். 7 ஓவரில் 43/5 ரன் எடுத்து தவித்தது. கடைசி கட்டத்தில் நபி (33), அஸ்மதுல்லா ஓமர்சாய் (64) கைகொடுக்க, ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 156/8 ரன் எடுத்தது. இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங், 3 விக்கெட் சாய்த்தார்.
அபிஷேக் ‘சரவெடி’
சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு சாம்சன் (10) ஏமாற்றினார். பின் 22 பந்தில் அரைசதம் எட்டிய அபிஷேக் சர்மா (82 ரன், 32 பந்து, 7X4, 7X6), இஷான் கிஷான் (42) வெளுத்து வாங்கினர். இந்திய அணி 13.4 ஓவரில் 157/3 ரன் எடுத்து மின்னல் வேக வெற்றி பெற்றது. கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் (8), திலக் வர்மா (3) அவுட்டாகாமல் இருந்தனர்.
