புதுடில்லி: டில்லியில், விடுதி கட்டடம் இடிந்து விழுந்து, ஏழு பேர் பலியானதை அடுத்து, அனுமதியின்றி கட்டப்பட்ட, 67 கட்டடங்களை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
டில்லியின் சத்ய நிகேதன் பகுதியில், மாணவர்கள் விடுதியாக செயல்பட்ட, 50 ஆண்டுகள் பழமையான ஐந்து மாடி கட்டடம், கடந்த 6ல் திடீரென இடிந்ததில், ஏழு பேர் பலியாகினர்.
விசாரணையில், கட்டு மானத்தில் பல்வேறு விதிமீறல்கள் நடந்தது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக கட்டட உரிமையாளர் ஹரிராம் குப்தா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இச்சம்பவத்தையடுத்து, டில்லி முழுதும் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. கடந்த 11, 12ம் தேதிகளில் நடந்த சோதனையின் முடிவில், 67 கட்டடங்கள் சட்டவிரோதமாக அனுமதியின்றி கட்டப்பட்டவை என்பது கண்டறியப்பட்டது.
அந்த கட்டடங்களை டில்லி மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து தள்ளினர். மேலும், ஒன்பது கட்டடங்களுக்கு, ‘சீல்’ வைக்கப்பட்டது. நஜப்கர், ஷஹ்தாரா வடக்கு பகுதி உள்ளிட்ட இடங்களில் அதிகளவில் கட்டடங்கள் இடிக்கப்பட்டன.
