எம்பாப்வே அபாரம்: ரியல் மாட்ரிட் வெற்றி

மாட்ரிட்: ஸ்பெயினில் லா லிகா கால்பந்து தொடர் நடக்கிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. மாட்ரிட்டில் நடந்த போட்டியில் ரியல் மாட்ரிட், ரயோ வல்லேகனோ அணிகள் மோதின. ரியல் மாட்ரிட் அணிக்காக 14வது நிமிடத்தில் எம்பாப்வே, ‘பெனால்டி’ வாய்ப்பில் ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து கடைசி நிமிடத்தில் (90) மற்றொரு கோல் அடித்தார். ஆல்வரோ (17), ஜூடு பெல்லிங்ஹாம் (35) தங்கள் பங்கிற்கு கைகொடுக்க, ரியல் மாட்ரிட் அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. பட்டியலில் 12 புள்ளியுடன் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது.

இங்கிலாந்து அணி முன்னேற்றம்

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சாார்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்படுகிறது. தற்போது நான்காவது சீசன் (2025-2027) நடக்கிறது. முதல் இரு இடம் பெறும் அணிகள் பைனலில் மோதும்.

சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என முழுமையாக கைப்பற்றியது. இதையடுத்து 38.54 சதவீத புள்ளிகள் பெற்ற இங்கிலாந்து அணி 6வது இடத்துக்கு முன்னேறியது. ஆஸ்திரேலியா (80.00), தென் ஆப்ரிக்கா (75.00), நியூசிலாந்து (72.22), வங்கதேசம் (55.56) ‘டாப்-4’ ஆக உள்ளன. 11 டெஸ்டில் 5 வெற்றி, 4 தோல்வியுடன் (2 ‘டிரா’), 51.52 சதவீத புள்ளி பெற்ற இந்தியா 5வது இடத்தில் நீடிக்கிறது.

கூடைப்பந்து: பைனலில் அமெரிக்கா

பெர்லின்: ஜெர்மனியில், பெண்களுக்கான உலக கோப்பை கூடைப்பந்து 20வது சீசன் நடக்கிறது. இதன் அரையிறுதியில் ஸ்பெயின், அமெரிக்க அணிகள் மோதின. இதில் அமெரிக்க அணி 76-66 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு அரையிறுதியில் ஜெர்மனி, பிரான்ஸ் மோதின. இதில் ஜெர்மனி 64-86 என தோல்வியடைந்தது. பைனலில் அமெரிக்கா-பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. மூன்றாவது இடத்துக்காக ஸ்பெயின்-ஜெர்மனி அணிகள் மோதுகின்றன.


எக்ஸ்டிராஸ்

* மாற்றுத் திறனாளிகளுக்கான செஸ் ஒலிம்பியாட் சீசன் 3, உஸ்பெகிஸ்தானில் நடக்கிறது. 41 நாடுகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் 7 சுற்றில் பங்கேற்கும். இந்திய அணி முதல் சுற்றில் உஸ்பெகிஸ்தான் ‘பி’ அணியை சந்தித்தது. இதில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

* கத்தாரில் கிளாசிக் ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில், ஜூனியர் உலக சாம்பியன், இந்தியாவின் அனாஹத் சிங், உலகத் தரவரிசையில் 9வது இடத்திலுள்ள பெல்ஜியத்தின் டின்னே கிலிசை சந்தித்தார். இதில் போராடிய அனாஹத், 2-3 (4-11, 11-8, 11-9, 4-11, 3-11) என தோல்வியடைந்தார்.

* இந்தோனேஷியாவில் சர்வதேச ஐ.எடி.எப்., டென்னிஸ் தொடர் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் கரண் சிங் 7-6, 7-5 என அமெரிக்காவின் சாங்கை சாய்த்து, கோப்பை வென்றார். சர்வதேச அரங்கில் இவர் வென்ற 5வது கோப்பை ஆனது.

* சீனாவில் ஆசிய பாட்மின்டன் ஜூனியர் சாம்பியன்ஷிப் நடந்தது. 17 வயது பிரிவு பெண்கள் ஒற்றையர் பைனலில் இந்தியாவின் தான்வி பத்ரி, சக வீராங்கனை ஷாய்னா மோதினர். இதில் தான்வி 11-15, 15-10, 15-12 என வென்று சாம்பியன் ஆனார். இப்பிரிவில் தொடர்ந்து இரண்டாவது முறையாக (2025ல் திக் ஷா) இந்தியா சாம்பியன் ஆனது.

Source link