ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தி தனி அரசியல் பாதையா? ஆதரவாளருடன் ஆலோசனை என தகவல்

கடந்த காலங்களில் பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே ஏற்பட்ட உட்கட்சி மோதலின் போது, ராமதாஸால் கட்சியின் செயல் தலைவராகவும் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராகவும் ஸ்ரீகாந்தி நியமிக்கப்பட்டார். பின்னர் அன்புமணி தரப்பு சட்டப் போராட்டங்களின் மூலம் கட்சியின் அதிகாரத்தைக் கைப்பற்றியதும், ராமதாஸ் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இருப்பினும், ராமதாஸ் விட்டுச்சென்ற சமூகநீதிப் பாதையைத் தொடர்வதாகக் கூறி, ஸ்ரீகாந்தி தனது ஆதரவாளர்களான முன்னாள் பொதுச் செயலாளர் முரளி சங்கர் மற்றும் முன்னாள் பொருளாளர் மன்சூர் ஆகியோருடன் புதிய அரசியல் பயணத்திற்கான விரிவான ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளார்.

பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கும் அவருடைய மகனும் அக்கட்சியின் தலைவருமான அன்புமணி ராமதாஸுக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக மோதல் நிலவியது. இதனால் ராமதாஸ், அன்புமணியை பா.ம.க தலைவர் பதவியில் இருந்து நீக்கினார். அன்புமணியின் ஆதரவாளர்களை கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கினார். தனது ஆதரவாளர்களை பொறுப்பாளர்களாக அறிவித்தார். அதே போல அன்புமணியும் தனது ஆதரவாளர்களுக்கு கட்சிப் பொறுப்பு அளித்தும், ராமதாஸ் ஆதரவாளர்களை நீக்கியும் அறிவிப்புகளை வெளியிட்டார். 

இந்த மோதலின் உச்ச கட்டமாக ராமதாஸ் தனது மூத்த மகள் ஸ்ரீகாந்தியை பா.ம.க-வின் செயல் தலைவராக நியமித்தார். பசுமையத் தாயகம் அமைப்பின் தலைவராகவும் அறிவித்தார். ஆனால், அன்புமணி மற்றும் அவருடைய ஆதரவாளராக கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் அனைவரும் தனக்கு இருக்கிறார்கள் என பொதுக்குழு கூட்டி மீண்டும் பா.ம.க-வின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இரு தரப்பும் நீதிமன்றம் சென்றனர். இறுதியில் அன்புமணியே வெற்றி பெற்றார். ராமதாஸ் ஆதரவு பா.ம.க தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி சந்தித்தது. ஆனால், அன்புமணி தலைமையிலான பா.ம.க 5 இடங்களில் வெற்றி பெற்றது. 

தேர்தலுக்கு பிறகு, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தனது மகனுடன் சமரசம் செய்து கொண்டு இணைந்தார். அதுமட்டுமில்லாமல், இனி அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அரசியலில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். தன்னைப் பார்க்க வருகிறவர்கள் அரசியல் பற்றி பேச வேண்டாம் என்று அறிவித்தார்.

ஆனால், ராமதாஸால் பா.ம.க-வின் செயல் தலைவராக நியமிக்கப்பட்ட அவரது மகள் தனது செயலை நிறுத்தவில்லை. டாக்டர் ராமதாஸ் வழியிலான பா.ம.க-வை தொடர்ந்து முன்னெடுப்போம் என்று தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். 

அந்த வகையில், ஸ்ரீகாந்தியின் ஆதரவாளரும் ராமதாஸால் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட முரளி சங்கர், பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விட்டுச் சென்ற சமூகநீதிப் பாதை முடிவடையவில்லை. அது அடுத்த தலைமுறையின் அரசியல் பயணமாகத் தொடர வேண்டும். அந்தப் பயணத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது.

நேற்று காந்தி அக்காவைச் சந்தித்து, அய்யா விட்டுச் சென்ற பணியை, அய்யாவின் வழியில் சமூகநீதிக்கான அரசியல் பயணத்தை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்றது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதன் மூலம், ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தி தனி அரசியல் பாதையைத் தொடர முடிவெடுத்துள்ளாரா என்ற கேள்வி அரசியல் களத்தில் எழுந்துள்ளது.

இது தொடர்பாக ஸ்ரீகாந்தியின் ஆதரவாளர் முரளி சங்கர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “அய்யா விட்டுச் சென்ற சமூகநீதிப் பாதை முடிவடையவில்லை. அது அடுத்த தலைமுறையின் அரசியல் பயணமாகத் தொடர வேண்டும். அந்தப் பயணத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது.

நேற்று காந்தி அக்கா அவர்களை சந்தித்து, அய்யா விட்டுச் சென்ற பணியை, அய்யாவின் வழியில் சமூகநீதிக்கான அரசியல் பயணத்தை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்றது.

கட்சியின் முன்னாள் பொருளாளர் அண்ணன் மன்சூர் அவர்களும்,மற்றும் சில அரசியல் ஆலோசகர்களும் உடனிருந்து பல முக்கியமான அரசியல் ஆலோசனைகளையும், தனது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

காந்தி அக்கா அவர்கள் பகிர்ந்த சில தகவல்கள் உண்மையிலேயே ஆச்சரியப்பட வைத்தன. அதைவிட முக்கியமாக, அவருடைய அரசியல் பார்வையும், புதிய யோசனைகளும் அடுத்த கட்ட நகர்வை இன்னும் ஆழமாக சிந்திக்க வைத்திருக்கின்றன.

இது ஒரு தனிப்பட்ட பயணம் அல்ல. ஒரு கொள்கையின் தொடர்ச்சி. சமூகநீதியை நோக்கிய ஒரு அரசியல் பயணம். அவசரப்படப் போவதில்லை. ஒவ்வொரு நகர்வும் ஆழமான ஆலோசனையோடும், தெளிவான நோக்கத்தோடும் இருக்கும். மெதுவாகவும் உறுதியாகவும் அமைதியாகவும் நகர்கிறோம். ஆனால், இலக்கு தெளிவாக இருக்கிறது. நகர்வு உறுதியானது. பயணம் தொடரும். கொள்கையோடு. சமூகநீதியோடு. 

தனி பாதையா? தொடர் பாதையா? காலமே பதில்” என பதிவிட்டுள்ளார். 

இதன் மூலம் பா.ம.க நிறுவனர் ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்தி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளதன் தனிப் பாதையை நோக்கி நகர்கிறார் என்றே தெரிகிறது. 

Source link