ஆளும் தவெக அரசு மீது அவ்வப்போது கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்த கம்யூனிஸ்ட் கட்சிகள், தற்போது வரக்கூடிய இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கூட்டணிச் சூழலும்.. வெளியிலிருந்து ஆதரவும்
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெறாத தமிழக வெற்றிக் கழகம், பல கட்சிகளின் ஆதரவை நாடியது. குறிப்பாக திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவு தவெக-விற்குத் தவிர்க்க முடியாத தேவையாக இருந்தது.இறுதியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் தவெக-வோடு கூட்டணி அமைத்தன. இவற்றில் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் ஆகியவை தவெக-வின் அமைச்சரவையிலும் இடம் பெற்றன. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சிகள் அரசுக்கு வெளியிலிருந்து மட்டுமே ஆதரவளிப்பதாகத் அறிவித்தன.
அரசு மீதான அதிருப்தியும் விமர்சனங்களும்
அரசு அமைந்த பின் கடந்த 100 நாட்களில் புதிய அரசின் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனித்து வந்த கம்யூனிஸ்ட் கட்சிகள், உடன்படாத விவகாரங்களில் முதலமைச்சரையும் அரசையும் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இருப்பினும், கம்யூனிஸ்ட் கட்சிகள்இரண்டையும் கூட்டணிக்குள் கொண்டு வர தவெக கடுமையாக முயற்சித்தது. ஆனால் அக்கட்சிகள் அதற்குப் பிடி கொடுக்கவில்லை.
மதராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட்டுகளின் நிலைப்பாடு என்ன என்பது குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்த நிலையில், தவெக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவளித்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளும் வரக்கூடிய இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளன. இதன் அடிப்படையில், மதராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிட உள்ளன.
5 முனைப் போட்டியாக மாறிய அரசியல் களம்
சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னான தமிழக அரசியல் களமே கணிப்புக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளால் நிறைந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட்டுகளின் இந்த நகர்வு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. குதிரை பேரம் நடத்தியதாகத் தவெக மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளைக் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒப்புக்கொண்டதால்தான் இந்த முடிவை எடுத்திருப்பதாகச் சில அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
விசா பற்றிய தவெக அரசின் நிலைப்பாடு, பேச்சு மற்றும் சைகைகளால் காட்டமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பி. சண்முகம் தவெக அரசைச் சாடியிருந்தார். இதுபோல சில விவகாரங்களில் தவெக அரசின் செயல்பாடுகள் கம்யூனிஸ்ட்டுகளை அதிருப்தி கொள்ளச் செய்ததாகவும், அதன் வெளிப்பாடே இந்தத் தனித்துப் போட்டி முடிவென்றும் பேச்சுகள் எழத் தொடங்கியுள்ளன.
தற்போது வரை எந்தக் கூட்டணியிலும் இல்லை என்றும், வரும் தேர்தலில் தவெக-விற்கு ஆதரவு இல்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தனித்துப் போட்டி என அறிவித்தது ஐமுனைப் போட்டிக்கு வழிவகை செய்துள்ளது. தவெக, திமுக, அதிமுக மற்றும் நாதக ஆகிய கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில், வரும் 15-ஆம் தேதி வேட்பாளர்களை அறிவிப்போம் என கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்துள்ளன.
வெற்றி தோல்வி என்பதை எல்லாம் தாண்டி, கம்யூனிஸ்ட்டுகள் களத்தில் குதித்திருப்பது அவர்களின் அடுத்தடுத்த திட்டங்களுக்கான செய்தியையே சொல்வதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
யாருடைய வாக்குகள் பிரியும்?
கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பாரம்பரியமாக தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் இடதுசாரி சிந்தனை கொண்ட வாக்காளர்கள் மத்தியில் ஓரளவு ஆதரவு உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகள் பெறும் வாக்குகள் திமுக அல்லது அதிமுகவின் பாரம்பரிய வாக்குகளிலிருந்தும் பிரிய வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
Source link
