சென்னை: நேரில் வராமல் ‘ஆன்லைன்’ முறையில் பதிவாகும் பத்திரங்களுக்கு ஒப்புதல் கொடுக்க, சார் – பதிவாளர்கள் முன்னுரிமை கொடுப்பதால், ‘டோக்கன்’ வாங்கியவர்களின் பத்திரங்களை பதிவு செய்ய, தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில், பத்திரப்பதிவு பணிகளை, ஆன்லைன் முறைக்கு மாற்ற, பதிவுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, ‘ஸ்டார் 3.0’ மென் பொருள் அறிமுகப் படுத்தப்பட்டது.
இதில், புதிய திட்டங்களில், வீடு, மனை வாங்குவதற்கான பத்திரங்களை, சார் – பதிவாளர் அலுவலகம் வராமல் பதிவு செய்யும் வசதி, ஆக.,17ல் அறிமுகமானது. இதற்கு மக்கள் மத்தியில், நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதையடுத்து, தற்போது, வீட்டுக்கடன் போன்ற விஷயங்களுக்காக, மக்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு எழுதி கொடுக்கும், எம்.ஓ.டி., எனப்படும் ஆவண ஒப்படைப்பு அட மான பத்திரம், கடன் முடி யும் போது மேற்கொள்ளப்படும் ரசீது ஆவணம் ஆகியவற்றையும், நேரில் வராமல் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய முடிவு, நாளை முதல் அமலுக்கு வருவதாக, பதிவுத்துறை அறிவித்துள்ளது.
‘ஆன்லைன்’ முறையில், பொது மக்கள் தாக்கல் செய்யும் பத்திரங்களுக்கு, 24 மணி நேரத்துக்குள் சார் – பதிவாளர்கள், ஒப்புதல் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால், தினமும் சார் – பதிவாளர்கள் அலுவலகத்துக்கு வந்ததும், முதல் பணியாக, ‘ஆன்லைன்’ முறையில் தாக்கலான பத்திரங்களை ஆய்வு செய்வதில் இறங்குகின்றனர்.
இந்த பணிகள் முடிந்த பின், வழக்கமான பிற பத்திரங்களை பதிவு செய்ய வருகின்றனர்.
இதன் காரணமாக, காலையில் பத்திரப்பதிவுக்கு டோக்கன் பெற்று வருவோர், பகல் 12:00 மணி வரை காத்திருக்க வேண்டியுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் பத்திரம் பதிவாக வேண்டும் என்பதற்காக பெறப்படும், ‘டோக்கன்’ பயனில்லாமல் போகிறது.
‘ஆன்லைன்’ முறையில் பதிவாகும் பத்திரங்களுக்கு, முன்னுரிமை அளிப்பதில் தவறில்லை. அதேநேரம் நேரடியாக பதிவு செய்ய வருவோரை காத்திருக்க வைக்காமல், அவர்களுக்கும் உடனடியாக பத்திரப்பதிவு செய்ய, நடவடிக்கை எடுக்க வேண் டும் என பொதுமக் கள் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து, சார் – பதி வாளர் ஒருவர் கூறியதாவது:
பதிவுத்துறை இணைய தளத்தில், ‘ஆன்லைன்’ பத்திரங்களை முடித்த பின்தான், நேரடியாக வரும் பத்திரங்களை பதிவு செய்யும் வகையில், மென்பொருள் செய்யப்பட்டுள்ளது.
நாங்கள் நினைத்தாலும், ‘ஆன்லைன்’ பத்திரத்தை தவிர்த்து, பிற பத்திரங்களை முதலில் பதிவு செய்ய முடியது.
இவ்வாறு அவர் கூறினார்.
