அதிர்ச்சி! ஒரு யூனிட் மின்சாரம் ₹30! கேரளாவில் முன்னெப்போதும் இல்லாத மின்சார தட்டுப்பாடு!

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் மின்வெட்டு மற்றும் லோடு ஷெடிங் செய்யப்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்க, வெளி மாநிலங்களில் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை அதிகபட்சமாக ரூ.30 வரை விலை கொடுத்து வாங்க அம்மாநில அரசு அதிரடி முடிவு செய்துள்ளது.

பொதுவாக ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.10 வரை கொடுத்து வாங்கவே மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளிக்கும். ஆனால், தற்போதைய அவசர நிலையைக் கருத்தில் கொண்டு, இந்த உச்சவரம்பைத் தளர்த்தி, எவ்வளவு விலை கொடுத்தாவது மின்சாரத்தை வாங்கி மக்களுக்குச் சீரான மின்விநியோகம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

மாநிலத்தின் மின்சார நிலைமை குறித்துப் பேசிய மின்சாரத் துறை அமைச்சர், “தற்போது மாநிலத்தில் மின் தேவை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. விலை அதிகமாக இருந்தாலும், மக்களுக்கு மின்சாரம் வழங்குவதே அரசின் முதன்மை நோக்கம். எனவேதான் ரூ.30 வரை செலவு செய்தாவது மின்சாரத்தைக் கொள்முதல் செய்யத் தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

1. இரவு நேரப் பயன்பாடு அதிகரிப்பு: வழக்கமாக மாலை வேளையில் மட்டுமே மின் தேவை அதிகமாக இருக்கும். ஆனால், தற்போது இரவு 10 மணி முதல் நள்ளிரவு 1:30 மணி வரை வீடுகளில் மின்சாரப் பயன்பாடு கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளது.

2. மழைக்குறைவு மற்றும் நீர்மின் உற்பத்தி சரிவு: கேரளாவில் மின்சார உற்பத்தியில் நீர்மின் திட்டங்களே முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால், அணைகளில் போதிய தண்ணீர் இல்லாததால் உள்நாட்டு மின் உற்பத்தி பெருமளவில் குறைந்துவிட்டது.

3. தேவைக்கும் வரத்துக்கும் இடையே உள்ள இடைவெளி: மாநிலத்தில் தினமும் சுமார் 5,000 மெகாவாட் முதல் 5,100 மெகாவாட் வரை மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால், கைவசம் இருப்பது 4,200 மெகாவாட் மட்டுமே. இதனால் தினமும் 700 முதல் 900 மெகாவாட் வரை பற்றாக்குறை நிலவுகிறது.

நிலைமையைச் சமாளிக்கக் கேரள மின்சார வாரியம் பல்வேறு அவசர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது:

என்.டி.பி.சி உடன்பாடு: தேசிய அனல்மின் கழகத்தின் ரத்னகிரி மின் நிலையத்திலிருந்து ஒரு யூனிட் ரூ.30 வீதம் 300 மெகாவாட் மின்சாரத்தை செப்டம்பர் 30-ஆம் தேதி வரை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

பிற மாநிலங்களுடன் பேச்சவார்த்தை: ஒடிசா மாநிலத்தில் இருந்து 150 மெகாவாட் (யூனிட் ரூ.10) மற்றும் அணுமின் கழகத்திடம் இருந்து 150 மெகாவாட் மின்சாரம் பெற முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது.

அதிகாரிகள் குழு பயணம்: பீகார், மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உபரியாக இருக்கும் மின்சாரத்தை வாங்க, KSEB உயர்மட்ட அதிகாரிகள் நேரடியாக நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தற்போது கேரளாவின் பல பகுதிகளில் இரவில் இரண்டு முதல் மூன்று முறை வரை மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வணிகர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எதிர்க்கட்சிகளும் அரசின் இந்த மின்சார நிர்வாகக் குளறுபடியைக் கண்டித்துப் போராட்டங்களை அறிவித்துள்ளன.

அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவது மாநில அரசுக்கும் மின்சார வாரியத்திற்கும் பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்றாலும், தற்போதைக்கு லோடு ஷெடிங்கை.. அதாவது பல இடங்களில் மின் தடை, லோ வோல்டேஜ், ஒரே பேஸ் மின்சாரம் போன்ற தடங்கல்களை தவிர வேறு வழியில்லை என்பதே தற்போதைய கள நிலவரமாக உள்ளது.