இனி வாட்ஸ்அப்பிலேயே பி.எஃப். பேலன்ஸ் பார்க்கலாம்; இ.பி.எஃப்.ஓ. கொண்டு வரும் புதிய வசதி

மத்திய தொழிலாளர் சேமநல நிதி அமைப்பு (EPFO), தனது சேவைகளை உறுப்பினர்களுக்கு எளிதாகக் கொண்டு சேர்க்கும் வகையில் வாட்ஸ்அப்பில் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் சேனலை (WhatsApp Channel)த் தொடங்கியுள்ளது. இதனுடன், செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான சாட்பாட் ஒன்றும் விரைவில் அறிமுகமாக உள்ளது.

வாட்ஸ்அப் சேனல் தொடக்கம்

அறிவிப்புகள் மற்றும் சேவைகள் தொடர்பான முக்கியத் தகவல்களை உடனுக்குடன் பெற, உறுப்பினர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் சேனலைப் பின்தொடருமாறு இபிஎஃப்ஓ கேட்டுக்கொண்டுள்ளது. இபிஎஃப்ஓ வழங்கும் கியூஆர் கோடு (QR Code) அல்லது அதிகாரப்பூர்வ இணைப்பு மூலம் இதை எளிதில் அடையலாம்.

ஏஐ சாட்பாட் வழங்கும் வசதிகள்

விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ள வாட்ஸ்அப் சாட்பாட் மூலம் பயனர்கள் தெரிந்து கொள்ளக்கூடிய விவரங்கள்:

பிஎஃப் கணக்கு இருப்பு (Balance)

கடைசி 5 பரிவர்த்தனைகள்

இபிஎஃப்ஓ கிளைம் (Claim) நிலை

இதர அடிப்படை கணக்கு விவரங்கள்

சேவையைப் பெறுவது எப்படி?

சரிபார்க்கப்பட்ட இபிஎஃப்ஓ வாட்ஸ்அப் எண்ணுக்கு “Hello” என அனுப்ப வேண்டும்.

உங்கள் மொபைல் எண் யூஏஎன் (UAN) உடன் இணைக்கப்பட்டுள்ளதா எனச் சிஸ்டம் சரிபார்க்கும்.

சரிபார்ப்பு முடிந்ததும், தேவையான சேவையைத் தேர்ந்தெடுத்து வழிமுறைகளைப் பின்பற்றி விவரங்களைப் பெறலாம்.

இந்தச் சாட்பாட் வட்டார மொழிகளையும் ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயனர்கள் தங்களுக்கு வசதியான மொழியில் தகவல்களைப் பெறலாம். 24 மணி நேரமும் இச்சேவை கிடைக்கும். போர்ட்டலைத் தேடி மீண்டும் மீண்டும் லாகின் செய்யும் அவசியமின்றி, வாட்ஸ்அப்பிலேயே பேலன்ஸ் மற்றும் கிளைம் ஸ்டேட்டஸை எளிதாகக் கண்காணிக்கலாம்.

முக்கிய பாதுகாப்பு எச்சரிக்கை:

அதிகாரப்பூர்வ இபிஎஃப்ஓ வாட்ஸ்அப் கணக்குகளை மட்டும் பயன்படுத்தவும். ஒருபோதும் ஓடிபி (OTP), கடவுச்சொற்கள், [Aadhaar Redacted] விவரங்கள் அல்லது வங்கிச் சான்றுகளை அதிகாரபூர்வமற்ற எண்களுக்குப் பகிர வேண்டாம்.

Source link