“தம்பி கொஞ்சம் நகருங்க”! திருவண்ணாமலை கோயிலில் சேகர்பாபுவை தள்ளிய பக்தர்! PKS முகத்தை பார்க்கணுமே!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பொதுமக்கள் வரும் வழியில் நின்றிருந்த முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவை பக்தர் ஒருவர் “கொஞ்சம் நகர்ந்து நில்லுங்க” என கூறிய காட்சிகள் வைரலாகி வருகிறது.

ஏற்கெனவே அவருக்கு அந்த கோயிலில் விஐபி தரிசனம் மறுக்கப்பட்ட நிலையில் பக்தர் ஒருவரின் இந்த செயலால் சேகர்பாபுவுக்கு இந்த நிலையா என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். இந்த கோயிலுக்கு கடந்த சில ஆண்டுகளாக சினிமா நடிகர்கள், அரசியல் பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் வந்து அண்ணாமலையாரையும் உண்ணாமலையம்மனையும் தரிசித்து செல்கிறார்கள்.

இவர்கள் எல்லாம் விஐபி தரிசன வரிசையில் நின்றுதான் தரிசனம் செய்வார்கள். அந்த வகையில் முன்னாள் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று முன் தினம் இரவு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வந்தார்.

அங்க வடக்கு கோபுரம் வழியாக உள்ளே வந்தார். அவர் கோயில் கொடிமரம் அருகே நின்று விநாயகரை வழிபட்டார். இதையடுத்து வைகுண்டவாயில் வழியாக உள்ளே சென்று சண்டிகேஸ்வரர் சன்னதி வழியாக அண்ணாமலையாரை வழிபட்டார்.

அப்போது அங்கிருந்து விஐபி வரிசையில் உண்ணாமலை அம்மனை தரிசனம் செய்ய அவர் காத்திருந்தார். ஆனால் அங்கு அவரை அழைத்துச் செல்ல கோயில் ஊழியர்கள் யாரும் இல்லை. அங்கு சிறிது நேரம் காத்திருந்த அவர் பொதுமக்கள் தரிசனம் செய்யும் வரிசையில் நின்று உண்ணாமலை அம்மனை தரிசனம் செய்தார்.

நடிகர், நடிகைகள், வெளிமாநிலத்தவர் எல்லாம் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி விஐபி தரிசனம் மேற்கொண்டு வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு இப்படி வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும் எல்லாவற்றிலும் ஹைலைட்டே இதுதான். அறநிலையத் துறை அமைச்சராக இருந்த போது சேகர்பாபு வைகுண்ட ஏகாதசி, சூரசம்ஹாரம், ஆடிக் கிருத்திகை, கோயில் கும்பாபிஷேகங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு சென்றிருக்கிறார்.

பக்தர்களின் வரிசையை சீரமைத்து அனுப்பியிருக்கிறார். அப்படிப்பட்ட அவர் சுவாமி பார்க்க ஒரு வாயில் அருகே நின்றிருந்த போது பின்னால் வந்த பக்தர் ஒருவர், “சார் கொஞ்சம் நகர்ந்து நில்லுங்க” என சேகர்பாபுவின் முதுகை தட்டி சொன்னதும் அவர் முகமே மாறிவிட்டது. இதே போல் ஆடிக் கிருத்திகையின் போதும் மலைக் கோயிலில் சேகர்பாபுவின் கார் அனுமதிக்கப்படவில்லை.

தற்போது அண்ணாமலையார் கோயிலில் நடந்தது குறித்து அமைச்சர் ரமேஷ் கூறுகையில், பொது மக்கள் தரிசன வரிசையில் நின்று சேகர்பாபு சுவாமி பார்த்ததில் என்ன தவறு, அவரை வரவேற்கவும் விஐபி தரிசனத்தில் அழைத்துச் செல்லவும்தான் கோயில் நிர்வாகிகள் இருக்கிறார்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

சேகர்பாபுவின் இந்த நிலையை பார்த்து பலரும் எப்படி இருந்தவர், இவருக்கா இந்த நிலைமை, பார்க்கவே பரிதாபமாக இருக்கிறதே என்கிறார்கள். மேலும் சிலர் வைகுண்ட ஏகாதசிக்கெல்லாம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு வந்து பக்தர்களை வேகமாக தரிசித்து விட்டு போகும்படி என்ன அதகளம் செய்வார், நன்றாக வேண்டும் என்கிறார்கள். எது எப்படியோ தவெக ஆட்சியில் முன்னாள் அமைச்சருக்கே இப்படி அரசியல் காழ்ப்புணர்ச்சியால் செய்வது சரியில்லை என்கிறார்கள்.