தமிழில் பிரபல பொழுதுபோக்கு நிகழ்ச்சியான பிக் பாஸ் தற்போது 10வது சீசனை எட்டியுள்ளது. கடந்த 6ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். வார இறுதியில் மட்டும் பேசும் இவர், கடந்த 12ஆம் தேதி பேசிய இவர் வீட்டிற்குள் தலைவர் பதவி வகித்த ஷாகிதா குறித்து பேசியிருந்தார். அவர் பேசியதாவது, “தலைவர் என்றால் என்னவென்று தெரியாமல்.. தலைமை பண்பு என்றால் என்னவென்று தெரியாமல், வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை அள்ளித் தெளித்துவிட்டு, எதிரணி மீது பழியை தூக்கிப் போட்டு, அங்கிருந்து தெறித்து ஓடுவது தலைவருக்கான தகுதி இல்லை. அது ஏமாற்று வேலை” என்றிருந்தார்.
இது சமூக வலைதளத்தில் வைரலானது. அதாவது கரூரில் 41 பேர் இறந்தததைக் குறிப்பிட்டு அக்கட்சியின் தலைவர் முதல்வர் விஜய்யை மறைமுகமாக விஜய் சேதுபதி விமர்சித்துள்ளதாக எக்ஸ் தளத்தில் பலரும் கருத்து கூறி வந்தனர். இதனிடையே அதிமுக எம்.பி, “நடிகர் விஜய் சேதுபதியின் கருத்துரிமையைப் பாதுகாக்க, அவருக்குச் சட்ட ரீதியாகத் துணை நிற்போம்” எனத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனால் இந்த விவகாரம் மேலும் பெரிதாக மாற தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வரும் விஜய் தொலக்காட்சி விளக்கம் அளித்துள்ளது.
அவர்கள் வெளியிட்டுள்ள விளக்கத்தில், “பிக் பாஸ் தமிழ் சீசன் 10 என்பது, ஒரு குறிப்பிட்ட விதிகள், வடிவம், கருப்பொருள்கள் மற்றும் விளையாட்டுச் சூழலின் கட்டமைப்பிற்குள் உருவாக்கப்படும் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி. இதில் இடம்பெறும் சம்பவங்கள், உரையாடல்கள் மற்றும் கருத்துகள் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகும். அதனால் அவை நிகழ்ச்சியில் நடக்கும் சூழலிலேயே புரிந்துகொள்ளப்பட வேண்டும். அதைவிட்டுவிட்டு நிகழ்ச்சிக்கு வெளியே உள்ள எந்தவொரு தனிநபரையும் அமைப்பையும் சித்தாந்தத்தையும் ஒப்பிட்டு பார்க்கக்கூடாது” எனக் குறிப்பிட்டுள்ளது.
