ஜென்சி பெண்கள் மனநிலை இப்படியா மாறுது? இந்த வார “தமிழா தமிழா” பலருக்கு பாடம்.. பெற்றோர்களே உஷார்

சென்னை: கல்யாணம் என்றாலே வாழ்க்கை துணை எப்படி இருக்க வேண்டும்? இருவரும் சேர்ந்து எப்படி வாழ்க்கை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் பொதுவாக பேசப்படும் விஷயம். ஆனால் ஜீ தமிழின் தமிழா தமிழா நிகழ்ச்சியில் இந்த வாரம் இளம் பெண்களும் அவர்களுடைய அம்மாக்களும் பேசியதை பார்த்தவர்களுக்கு இப்போது எல்லாம் கல்யாணம் என்றால் இவ்வளவு லிஸ்டா? என்ற கேள்வி தான் வருகிறது.

வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்ற தலைப்பில் ஜென்சி பெண்கள் தங்களுடைய எதிர்பார்ப்புகளை சொல்ல ஆரம்பிக்க, சில ஆசைகள் உண்மையிலேயே அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஒரு பொண்ணு சொல்கிறார், அவங்க அம்மா வீட்டில் 100 பவுன் நகை கொடுக்கணுமாம், கணவர் தரப்பில் இருந்து 50 பவுன் மொத்த 150 பவுன் போட்டு தான் திருமணம் நடக்க வேண்டுமாம். அதுவும் பைவ் ஸ்டார் ஹோட்டலில் கல்யாணம் நடக்க வேண்டும் என்பதுதான் அவருடைய ஆசையாம்.

அதற்கு அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஆவுடையப்பன் 150 பவுனுக்கு எவ்வளவு செலவாகும் என்று தெரியுமா? என்று கேட்க, அந்த பெண் சிரித்துக் கொண்டே தெரியாது சார் என்று சொல்கிறார். அம்மாவோ ஒன்றரை கோடி ரூபாய் வரை செலவாகும் என்று சொல்லிய பிறகும் அந்தத் தொகையில் எத்தனை லட்சம் இருக்கிறது என்பது கூட தெரியாது என்று அந்த பொண்ணு சிரித்தபடியே சொல்வது பார்க்கும் நமக்கு முகம் சுளிக்க வைக்கிறது.

ஒவ்வொரு ரூபாய்க்கும் கஷ்டப்படுகிறவர்களுக்கு மட்டும்தான் அதன் வலி வேதனை தெரியும். ஆனால் பிள்ளைகளாக பிறந்து விட்டோம் என்பதற்காக இந்த பெண்கள் கொஞ்சம் கூட வலிகள் இல்லாமல் சிரித்தபடியே டிமாண்ட் வைப்பது வேடிக்கையாக இருக்கிறது. இது மட்டும் ஒரு விஷயம் இல்ல, இன்னொரு விஷயம் அங்கே நடந்தது. ஒரு பொண்ணு சொல்லுது நான் டாக்டராக வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் அது படிக்க கஷ்டமா இருந்ததால் எனக்கு தலை முடி நீளமாக வைத்த ஒரு டாக்டர் பையன் தான் மாப்பிள்ளையா வர வேண்டும், எங்க அம்மா எனக்கு 200 பவுனு நகை போட்டு கல்யாணம் பண்ணனும் என்று சொல்லுறாங்க.

நீங்க டாக்டராக முடியலன்னா அதற்காக மாப்பிள்ளை டாக்டராக இருக்கணுமா? வாழ்க்கை துணை நல்ல மனிதராக இருக்க வேண்டும் என்பதற்கு பதிலாக அவருடைய பதவி, சம்பளம், வீடு என லிஸ்ட் போகிறதே என்று ரசிகர்கள் நொந்து கொள்வதை பார்க்க முடிகிறது. இது மட்டுமில்லங்க இன்னொரு பொண்ணும் அவங்க அம்மாவும் சொன்னது கொஞ்சம் வேடிக்கையாக இருந்தது.

அந்த பொண்ணுக்கு சின்ன வயசுல இருந்தே விஜய் ரொம்ப பிடிக்குமாம். இப்போ அவர் முதல்வர் ஆனதும் கண்டிப்பா இந்த பொண்ணு கல்யாணத்துக்கு வரணுமாம். அந்த கல்யாணத்தில் 40 வகை ஸ்வட் வைக்கணுமாம். கல்யாணத்திற்கு குறிப்பிட்ட சொந்தக்காரங்க, நண்பர்கள் மட்டும் அல்லாமல் பொதுமக்கள் எல்லாரும் வரலாம் என்று சொல்லி அவர்கள் அனைவருக்குமே சாப்பாடு போட்டு அனுப்பனுமாம். இதுதான் அந்த பொண்ணின் ஆசையாம்.

உடனே அதிர்ச்சியான தொகுப்பாளர் அந்த பெண்ணின் அம்மாவிடம், முதல்வர் விஜய் வரணும்னு சொல்றாங்களேம்மா அது நடக்குமா? என்று கேட்க, அதற்கு அந்த அம்மா கண்டிப்பா முதல்வர் வரவேண்டும் அதில் எந்த மாற்றமும் இல்லை என்று அந்த அம்மாவும் சொல்லுறாங்க. அதை பார்க்கும் ரசிகர்கள் இப்போதைய பெண்களின் மனமாற்றத்திற்கு காரணம் அவர்களின் பெற்றோர் தானா? என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

இன்னொரு பெண் தன்னுடைய காதல் பிரிந்து போனதற்கு காரணமே என்னுடைய அம்மா தான் என்று அம்மா மீது பெரிய குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். அதற்கு அந்த அம்மா கடுப்பாகி, இவங்க காதல் பிரிந்து போனதற்கு நான் காரணம் என்று சொல்கிறாளே இவள் காதலித்த பையன் என்ன சொன்னான் தெரியுமா? அந்த பையன் என்கிட்ட வந்து அவங்க அம்மா ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்க சொல்றாங்களாம் அந்த பொண்ணை கண்டிப்பா கல்யாணம் பண்ணி தான் ஆகணுமாம், ஆனால் உங்க பொண்ணையும் கைவிடமாட்டேன் என்று சொல்லுகிறான். இது எந்த வகையில் நியாயம்?

எனக்கு இந்த பொண்ணுக்கு ஒன்றறை வயசு ஆக இருக்கும்போது என்னுடைய கணவர் இறந்து போயிட்டாரு. அதற்கு பிறகு கஷ்டப்பட்டு என்னுடைய குழந்தையை சிங்கிள் மகராக நான் வளர்த்து இருக்கிறேன். இப்போ இவளை காதலித்தேன் என்ற ஒருத்தன் வந்து உங்க பொண்ணை துணைவியாக வைத்துக் கொள்கிறேன் என்பது போல வந்து சொல்கிறான். அதற்கு நான் எப்படி சம்மதிக்க முடியும்? என்று கேட்க, அந்தப் பெண்ணுக்கு குற்ற உணர்ச்சி எதுவும் இல்லாமலே முதலில் என்னுடைய அம்மா தான் என் காதல் பிரிவுக்கு காரணம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

கடைசியில் தொகுப்பாளர் அந்தப் பையன் தன்னுடைய அம்மா சொன்ன பொண்ணை விட முடியாது, உன்னையும் விட முடியாதுன்னு சொல்லுறான் இதில் அவன் எவ்வளவு சுயநலமாக இருக்கிறான்? இப்படிப்பட்டவனோடு உனக்கு எப்படிம்மா கல்யாணம் பண்ணி வைக்க முடியும் என்று எடுத்து சொன்ன பிறகு அந்த பொண்ணு புரிஞ்சுகிட்டேன் என்று சொல்கிறது.

இதையெல்லாம் பார்க்கும் போது நம்முடைய மனதில் பல கேள்விகள் எழலாம். இப்போதுள்ள பெண்கள் மொத்தமாக இப்படியே இருக்கிறார்ளா? என்று இந்த ஒரு நிகழ்ச்சியை பார்த்ததும் நாம் முடிவுக்கு வர முடியாது. ஆனால் இது போன்று பெண்களின் மனநிலையில் இருக்கிறது என்பது பலருக்கு பாடமாகவும் இருக்கிறது. அம்மா வீட்டில் இத்தனை பவுன், வேண்டும் கணவன் இவ்வளவு பவுன் போட வேண்டும், பெரிய வீடு வேண்டும், டாக்டர் மாப்பிள்ளை வேண்டும், திருமணத்தை பைவ் ஸ்டார் ஹோட்டலில் நடத்த வேண்டும் என வசதிகளின் பட்டியலாக பறக்க ஆரம்பித்துவிட்டால் ஒரு விஷயம் மட்டும் கேட்க வேண்டியது இருக்கிறது.

இந்த வாழ்க்கையில் நாமும் சுயமாக சம்பாதித்து உருவாக்க வேண்டும், நம்முடைய தேவைகளை நாமே பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற பெண்களின் சுய நம்பிக்கைகள் குறைகிறதா? அல்லது செல்லம் கொடுக்கிறோம் என்கிற பெயரில் இந்த குழந்தைகளின் எதிர்காலம் மாற்றப்படுகிறதா? என்பது கேள்வியாக வருகிறது. வரதட்சணை கேட்டு பெண்கள் கொல்லப்படும் செய்திகள் இன்னும் நம்மை சுற்றியே இருக்கின்றன. அப்படி இருக்க என் அம்மா வீட்டில் இவ்வளவு தரவேண்டும் என்று பெண்ணே எதிர்பார்ப்பது என்ன மாதிரியான மாற்றம்?

ஜீ தமிழ் நிகழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுத திருநங்கை.. முதலமைச்சர் விஜய் சார்பாக கிடைத்த மறக்க முடியாத கிஃப்ட்
அம்மா வீட்டில் இருக்கும் பொருளாதார நிலை என்ன? அந்த நகைக்காக பெற்றோர் எவ்வளவு கஷ்டப்படுவார்கள்? கடன் வாங்க வேண்டுமா? என்று தான் யோசிக்க வேண்டும். நல்ல கணவர் வேண்டும் என்பதில் தவறில்லை. நல்ல வசதியான வாழ்க்கை வேண்டும் என்பதிலும் தவறு இல்லை. அந்த வாழ்க்கை இருவரும் சேர்ந்து உருவாக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். மாப்பிள்ளை எத்தனை பவுன் கொடுக்கிறார் என்பதை காட்டிலும் அவர் உங்களை மதிப்பாரா? கஷ்டத்தில் உங்களோடு நிற்பாரா? என்பதுதான் வாழ்க்கைக்கு முக்கியம். இல்லை என்றால் கல்யாண நாள் மட்டும் பைவ் ஸ்டார் ஹோட்டலில் பிரம்மாண்டமாக இருக்கும். அதற்குப் பிறகு வாழ்க்கையில் “பில்” கட்டிக் கொண்டே போகிற கதையாகிவிடும்.