சென்னை: முதல்வர் துறையில் ரூ 45,00,000 கூட்டுச்சதி டெண்டர் முறைகேடு நடந்துள்ளது என்றும், தாம்பரம் மாநகராட்சியில் ஜூலை மாதத்தில் அமைச்சர் சரத் திறந்த சிலைக்கு ஆகஸ்ட் மாதம் டெண்டர் போட்ட அவலம் நடந்துள்ளது என்றும் அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. த.வெ.க அரசின் முதல் டெண்டர் முறைகேடு இது தான் என்றும் அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.
அறப்போர் இயக்கம் வீடியோ உடன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறுகையில், “தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் சட்ட விதியை அப்பட்டமாக மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே கூட்டுசதி செய்து பணிகளை முடித்து திறப்பு விழா செய்துள்ள மிகப்பெரிய முறைகேட்டை அறப்போர் இயக்கம் தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது.
ஜூலை மாதத்தில் அமைச்சர் சரத் திறந்த சிலைக்கு ஆகஸ்ட் மாதம் டெண்டர் போட்ட அவலம் . ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவோம் என உறுதியளித்து வந்த புதிய TVK அரசின் கீழ், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் IAS இது போன்ற டெண்டர் முறைகேடுகள் செய்வது அதிர்ச்சியளிக்கிறது. இது குறித்த புகாரை அறப்போர் இயக்கம் இன்று முதல்வர், லஞ்ச ஒழிப்பு துறை உள்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளது. தாம்பரம் ஆணையர் பாலச்சந்தர் IAS மீது நடவடிக்கை பாயுமா ?” என்று அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பி உள்ளது.
அறப்போர் இயக்கம் என்பது தமிழ்நாட்டில் ஊழலுக்கு எதிரான செயல்பாடுகள், வெளிப்படைத்தன்மை மற்றும் நிருவாகச் சீர்திரு்கங்களை வலியுறுத்தி சமூக அமைப்பாக செயல்படுகிறது. அறப்போர் இயக்கத்தை பொறுத்தவரை அரசுத் துறைகளில் நடக்கும் ஊழல் முறைகேடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவது மற்றும் சட்டப் போராட்டங்களை முன்னெடுப்பது தான் முதன் பணியாக செய்து வருகிறது. இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக ஜெயராம் வெங்கடேசன் செயல்பட்டு வருகிறார்.
இந்த சூழலில் தாம்பரம் மாநகராட்சி டெண்டரில் ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறுகையில், நண்பர்களே வணக்கம், தவெக ஆட்சியில் ஊழலை ஒழிக்க போகிறோம் என்று முதல்வர் விஜய் கூறினார். ஆனால் முதல்வர் விஜய் அமைச்சராக இருக்கக்கூடிய முனிசபல் அட்மினிஸ்டரேஷனல் வாட்டர் சப்ளை டிபார்ட்மெண்ட்டின் கீழ் வரக்கூடிய தாம்பரம் மாநகராட்சியில், எப்படி ஒரு மிகப்பெரிய டெண்டர் முறைகேடு நடந்திருக்கிறது.. ஆதாரங்களை வீடியோவில் பகிர்ந்துள்ளோம். இதற்கான புகாரை அறப்போர் இயக்கம் அரசாங்கத்திற்கு அனுப்பி உள்ளது. இதன் மீது என்ன நடவடிக்கை எடுக்க போகிறார் முதல்வர் விஜய்.
இந்த டெண்டர் முறைகேடு இரண்டு ஒப்பந்தங்களில் நடந்துள்ளது. ஜூலை 29ம் தேதி அமைச்சர் சரத்குமார், தாம்பரம் முனிசிபல் கார்ப்பரேஷனுடைய கமிஷனர் பாலச்சந்திரன் ஐஏஎஸ் ஆகியோர் இணைந்து பெருங்களத்தூர் ரவுண்டா பாலம் பகுதியில் அசோக சக்கரம் சிலையை திறந்து வைக்கிறார்கள். ஜூலை 29ம் தேதி திறந்து வைத்துள்ளோம் என்பதற்கான பதிவினை சரத்குமார் அவர்கள் சமூக வலைதள பக்கத்திலேயே போட்டிருக்கிறார். தாம்பரம் மாநரகராட்சியும் அவங்க பக்கத்தில் போட்டிருக்காங்க.. ஆனால் இந்த அசோகா பில்லர் சிலைக்கான டெண்டரே ஆகஸ்ட் 6ம் தேதி தான் போடப்பட்டிருக்கிறது. ஆனால் சிலையையே ஓபன் பண்ணிட்டாங்க.. வேலையையே முடிச்சுட்டாங்க.. எல்லா வேலையும் ஜூலை 29ம் தேதியே முடிந்துவிட்டது.
ஆகஸ்ட் 6ம் தேதி அதற்கான டெண்டர் போட்டு, யாரோ போட்டி போடுவது போல இவங்களா ஒரு வேஷத்தை போட்டு, ஆகஸ்ட் 24ம் தேதி தான் டெண்டர் முடிவது போல் காண்பித்துள்ளார்கள். அதைவிட வேடிக்கை இந்த டெண்டர் பணியினை இரண்டு மாதத்தில் முடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். இந்த டெண்டர் இன்வைட்டிங் அத்தாரிட்டி தாம்பரம் மாநகராட்சி கமிஷராக இருக்கக்கூடிய ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் கொடுத்துள்ளார்.
முதல்வர் துறையில் ரூ 45,00,000 கூட்டுச்சதி டெண்டர் முறைகேடு
தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் சட்ட விதியை அப்பட்டமாக மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே கூட்டுசதி செய்து பணிகளை முடித்து திறப்பு விழா செய்துள்ள மிகப்பெரிய முறைகேட்டை அறப்போர் இயக்கம் தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு… pic.twitter.com/YxxeSJnoZt
இது ஒன்று மட்டும் கிடையாது, சிட்லப்பாக்ககம் ஏரியில் தண்ணீரை சேமிப்போம் என்பதற்கான ஒரு சிலையை திறந்து வைத்துள்ளார்கள். அந்த சிலையையும் அமைச்சர் சரத்குமார் திறந்து வைத்துள்ளார். அதற்கும் டெண்டர் கோருவது ஆகஸ்ட் 6ம் தேதி தான்.. ஆகஸ்ட் 24ம் தேதி வரை ஒப்பந்ததாரர்கள் போய் சப்மிட் பண்ணலாம்.. இந்த இரு டெண்டரிலும் ஒப்பந்தத்தை ஏற்கனே பிக்ஸ் பண்ணிவிட்டார்கள்.. அசோக பில்லர் சிலையின் விலை 27 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்.. சேவ் வாட்டர் சிலையின் விலை 18 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்… ஒட்டுமொத்தமாக 45 லட்சம் டெண்டர்கள் முன்கூட்டிய முடிவு செய்து சதி செய்துள்ளார்கள்” என்று அறப்போர் இயக்கம் வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக பாலசந்திரன் ஐஏஎஸ் மற்றும் அமைச்சர் சரத்குமார் மற்றும் தமிழக அரசு தரப்பில் விளக்கம் தந்தால் வெளியிடுவோம். அவர்கள் தரப்பு விளக்கம் விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்.
