– சிறப்பு நிருபர் -:
ஆந்திராவில், நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடக்கும் நிலையில், தொகுதி பங்கீட்டு விவகாரத்தில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி – ஜனசேனா கட்சி இடையே மோதல் வெடித்துள்ளது. குறைவான தொகுதிகளே ஒதுக்கப்பட்டு உள்ளதால், ஜனசேனா நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில், தே.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இதில், பிரபல தெலுங்கு நடிகரும், துணை முதல்வருமான பவன் கல்யாணின் ஜனசேனா, பா.ஜ., ஆகியவை அங்கம் வகிக்கின்றன. இங்கு கடைசியாக, 2021ல் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது.
அதில், அப்போது ஆளுங்கட்சியாக இருந்த முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்., அபார வெற்றி பெற்றது. தற்போது, ஐந்து ஆண்டுகளுக்கு பின் உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளது. இதில், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, 34 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய ஆந்திர அரசின் உத்தரவை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்தது.
தனித்து போட்டி
இதைத் தொடர்ந்து, ஆந்திராவில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடக்கின்றன. இந்த தேர்தல், நடப்பு மாதம் முதல், டிசம்பர் வரை பகுதி பகுதியாக நடக்கிறது. இந்த தேர்தலில், ஆளும் தெலுங்கு தேசம் – ஜனசேனா – பா.ஜ., கூட்டணிக்கு, பிரதான எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர்.காங்., கடும் சவாலாக விளங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளும் கூட்டணியில், தொகுதி பங்கீடு விவகாரத்தில் கருத்து மோதல் நிலவுவதாகக் கூறப்படுகிறது. எனினும், கூட்டணி கட்சி தலைவர்கள் நீண்ட நேரம் பேச்சு நடத்தி ஒருவழியாக தொகுதி பங்கீட்டை இறுதி செய்தனர். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு இடங்கள் கிடைக்காததால், ஜனசேனா நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தெலுங்கு தேசம் கட்சியிலும் சிலர் அதிருப்தியில் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
தமிழகத்தில், கட்சி துவங்கிய இரண்டே ஆண்டுகளில், சட்டசபை தேர்தலில் தனித்து வென்று, முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றதை தொடர்ந்து, ஜனசேனாவும் தனித்து போட்டியிட வேண்டும் என, கட்சி நிர்வாகிகள் சிலர் வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. விஜயை போல பவன் கல்யாணும் தனித்து போட்டியிட வேண்டும் என்ற குரலும் அக்கட்சியில் வலுத்து வருகிறது.
அதே சமயம், பவன் கல்யாணின் காபு சமூகத்தினரும் தெலுங்கு தேசம் கட்சியிடம் இருந்து கூடுதல் இடங்களை பெற வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர். கடந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள, 175 இடங்களில் ஜனசேனாவுக்கு, 21 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அந்த, 21 தொகுதிகளிலும் அக்கட்சி வெற்றி பெற்றது. இதனால், உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களை பெற வேண்டும் என, ஜனசேனா நிர்வாகிகள் கட்சித் தலைமையை வலியுறுத்தி வருகின்றனர்.
அதிக எதிர்பார்ப்பு
ஜனசேனாவில், ‘நம்பர் – 2’ ஆக கருதப்படும் அமைச்சர் நாதெண்ட்லா மனோகர், ‘உள்ளாட்சித் தேர்தலில், 40 சதவீத இடங்களை பெறுவதே கட்சியின் இலக்கு’ என, ஏற்கனவே தெரிவித்தார். இதற்கு பவன் கல்யாணும் ஆதரவு தெரிவித்ததால், கட்சியினரிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
நீண்ட பேச்சுக்கு பின், மொத்தமுள்ள, 108 நகராட்சிகள் மற்றும் நகர பஞ்சாயத்துகளில், ஜனசேனாவுக்கு, 21 இடங்கள் ஒதுக்கப்பட்டன. பா.ஜ.,வுக்கு ஏழு இடங்களும், தெலுங்கு தேசத்துக்கு, 78 இடங்களும் ஒதுக்கப்பட்டன.
அதே போல, மொத்தமுள்ள, 17 மாநகராட்சிகளில் ஜனசேனாவுக்கு நான்கு, பா.ஜ.,வுக்கு இரண்டு, தெலுங்கு தேசத்துக்கு, 11 மாநகராட்சிகள் ஒதுக்கப்பட்டன. இதன் மூலம், ஜனசேனா கேட்ட, 40 சதவீத இடங்களுடன் ஒப்பிடுகையில், பாதிக்கும் குறைவான இடங்களே கிடைத்துள்ளன. இதனால் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
ஆளும் கூட்டணியில் நிலவும் புகைச்சலை சாதகமாக பயன்படுத்தி, சட்டசபை தேர்தல் தோல்விக்கு உள்ளாட்சித் தேர்தலில் பதிலடி கொடுக்க, ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தீவிரமாக பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது. தொகுதி பங்கீடு விவகாரத்தில் ஆளும் கூட்டணியில் ஏற்பட்டுள்ள அதிருப்தி, உள்ளாட்சித் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இடங்கள் கிடைத்தும்
ஜனசேனாவுக்கு சிக்கல்
ஜனசேனாவுக்கு ஒதுக்கப்பட்ட நான்கு மாநகராட்சிகளிலும் சில சிக்கல்கள் எழுந்துள்ளன. மாநிலத்தின் முக்கிய மாநகராட்சிகளில் ஒன்றான விஜயவாடா, ஜனசேனாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தெலுங்கு தேசத்தில் இருந்து ஜனசேனாவுக்கு மாறிய வங்கவீட்டி ராதா, இங்கு மேயர் வேட்பாளராக களமிறங்குகிறார்.காபு சமூகத்தைச் சேர்ந்த இவர், அரசியல் பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். விஜயவாடாவை ஜனசேனாவுக்கு ஒதுக்கியதற்கும், ராதாவை மேயர் வேட்பாளராக முன்னிறுத்தியதற்கும் தெலுங்கு தேசத்தின் உள்ளூர் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஜனசேனாவுக்கு ஒதுக்கப்பட்ட ஸ்ரீகாகுளம், காக்கிநாடா மாநகராட்சிகள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இதனால், அங்கு தேர்தல் நடக்காது. ஏலுாரு சட்டசபை தொகுதியில் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ., உள்ள நிலையில், இந்த மாநகராட்சி ஜனசேனாவுக்கு கொடுக்கப்பட்டதற்கு தெலுங்கு தேசத்தின் உள்ளூர் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
முக்கியத்துவம் வாய்ந்த திருப்பதி மாநகராட்சியை பெற தெலுங்கு தேசம், ஜனசேனா, பா.ஜ., ஆகிய மூன்று கட்சிகளும் விரும்பின. ஆனால், அந்த மாநகராட்சி தெலுங்கு தேசத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சட்டசபையில் இந்த தொகுதியை ஜனசேனா பிரதிநிதித்துவப்படுத்தும் நிலையில், மாநகராட்சி தெலுங்கு தேசத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, கூட்டணியில் அதிருப்தியை அதிகரித்துள்ளது.
கூட்டணியில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் விருப்பத்துக்கு இணங்குவதற்காக, ஜனசேனாவின் நலனையும், காபு சமூகத்தின் எதிர்பார்ப்புகளையும் துணை முதல்வர் பவன் கல்யாண் சமரசம் செய்து கொள்வதாக, அவரது கட்சி நிர்வாகிகளே கொந்தளிக்கின்றனர்.
