ஆத்துார்: சேலம் மாவட்டம், ஆத்துார், வடசென்னிமலை அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரியில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில், காங்., கட்சியை சேர்ந்த உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார்.
அதை ஒட்டி, காங்., சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் தேவேந்திரன், காட்டுக்கோட்டை முதல் வடசென்னிமலை அரசு கல்லுாரி வரை, காங்., கொடிகள் கட்டப்பட்டிருந்தன.
கல்லுாரி வளாக பகுதியில், தமிழக அரசின் முத்திரை உள்ள பேனரில், முதல்வர் விஜய் படம் சிறிதாகவும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், தமிழக காங்., தலைவர் மாணிக்கம் தாகூர், அமைச்சர் விஸ்வநாதன், மாவட்ட தலைவர் தேவேந்திரன், கல்லுாரி முதல்வர் ரவீந்திரன் படங்கள் பெரிதாகவும் இடம் பெற்றிருந்தன.
காங்., கட்சி கொடி நிறத்தில், அமைச்சர், மாவட்ட தலைவர் பெயர்கள் எழுதப்பட்டிருந்த பேனரில், கல்லுாரி முதல்வர் படம், பெயர் இடம் பெற்றிருந்தது.
விழா மேடை அருகே, மற்றொரு பேனரில், அமைச்சர் விஸ்வநாதன் படம் மட்டும் பெரிதாக இருந்தது.
அந்த பேனரில் கடைசி நேரத்தில், முதல்வர் விஜய் படத்தின் ஸ்டிக்கர் மட்டும் சிறிதாக ஒட்டப்பட்டிருந்தது.
உளவுத்துறை எஸ்.பி., மயில்வாகனன் பங்கேற்ற நிலையில், அத்துறை போலீசார் அறிவுறுத்தியும், கல்லுாரி நிர்வாகம், பேனரை அகற்றவோ, மாற்றவோ செய்யாததால், சர்ச்சை எழுந்தது.
ஆத்துார் ஆர்.டி.ஓ., தமிழ்மணி, தலை வாசல் தாசில்தார் காத்தமுத்து, மேடையில் கீழ் பகுதியில், பத்திரிகையாளர்களுக்கு இருக்கை போட்ட இடத்தில் அமர வைக்கப்பட்டனர்.
அரை மணி நேரத்துக்கு பின், ஆர்.டி.ஓ.,வை மட்டும், மேடையில் அமர வைத்தனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அமைச்சர் பங்கேற்ற விழாவில், கெங்கவல்லி, ஆத்துார் தொகுதி, அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் நல்லதம்பி, ஜெயசங்கரனுக்கு அழைப்பு விடுக்கப்படாததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
