கடவுளே எதிரிக்கும் என் நிலைமை வரக் கூடாது:மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியிடம் வேண்டிய தேவா

தேவா பேட்டி: 1986ம் ஆண்டு திரையுலக பயணத்தை துவங்கியதேனிசைத் தென்றல் தேவா நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவர் கடைசியாக இசையமைத்த படம் சாருகேசி. ஒய்.ஜி. மகேந்திரன், சுஹாசினி மணிரத்னம், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்த அந்த படம் கடந்த ஜூன் மாதம் ரிலீஸானது.

அது தான் தேவா இசையில் வெளியாகும் கடைசி படம் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்நிலையில் 29 ஆண்டுகளுக்கு முன்பு விக்டனுக்கு அளித்த பேட்டியில் தேவா தன் கஷ்டத்தை பற்றி பேசியதை தெரிந்து கொள்ளுங்கள். நான் இவ்வளவு கஷ்டப்பட்டேன் என அடிக்கடி பேசும் ஆள் இல்லை அவர். எதையும் பாசிட்டிவாக பார்க்கும், பேசும் தேவா தன் கஷ்டத்தை பற்றி பேசியது அரிதான விஷயமாகும்.

டிவியில் வேலை: அந்த பேட்டியில் தேவா கூறியிருந்ததாவது, ஆர்மோனியம் மட்டுமே வாசிக்கத் தெரிந்த நிலையில் சினிமாவில் பெரிய இசையமைப்பாளராக ஆக வேண்டும் என்கிற ஆசையில் வந்தேன். பதினாறு ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகே என் கனவு நிறைவேறியது.

1976ம் ஆண்டில் டிவியில் ஃப்ளோர் அசிஸ்டென்டாக மாதம் ரூ. 460க்கு வேலைக்கு சேர்ந்தேன். ஆனாலும் அதில் நான் திருப்தி அடையவில்லை. இசையமைப்பாளர் ஆவதே என் இலக்கு என்று இருந்தேன். 1978ம் ஆண்டு தயாரிப்பளர் ஒருவரை சந்திக்கலாம் வா என என்னை கோடம்பாக்கத்திற்கு அழைத்துச் சென்றான் என் நண்பன் கவி. மதியம் 2 மணிக்கு டிவி நிலையித்தில் இருந்து அந்த தயாரிப்பாளரை பார்க்க நானும், கவியும் சைக்கிளில் சென்றோம்.

இசை வாய்ப்பு: என்னை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தான் நண்பன். உங்களுக்கு இசையமைப்பாளர் வாய்ப்பு தருகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை உண்டு. இன்னும் சிறிது நேரத்தில் இங்கு பாடகர் ஒருவர் வருவார். அவர் எப்படி பாடினாலும் அதை கேட்டுவிட்டு அருமை என்று சொல்ல வேண்டும் என்றார் தயாரிப்பாளர். நமக்கு இசையமைப்பாளர் வாய்ப்பு கிடைக்கிறதே என்கிற சந்தோஷத்தில் நானும் சரி என்றேன்.

அந்த பாடகர் வந்தார். சந்திரபாபு பாடிய நான் ஒரு முட்டாளுங்க பாடலை கொலை செய்தார். எதற்காக இப்படியொரு ஆளுக்கு வக்காலத்து வாங்குகிறார் தயாரிப்பாளர் என நினைத்தேன். அதன் பிறகே அந்த பாடகருக்கும் அது தான் முதல் வாய்ப்பு என்றும், அவர் பணத்தில் தான் ரெக்கார்டிங் நடக்கப் போகிறது என்றும், பாடலை எழுதியவர் தயாரிப்பாளர் என்பதும் தெரிய வந்தது.

பாடல் ரெக்கார்டிங் நடந்தது. நான் ஏன் பிறந்தேன் என்கிற வரிகள் கொண்ட பாடலை அந்த நபர் பாடினார். நான் இசையமைக்கும் முதல் பாடலே இப்படியா என நெருடல் இருந்தபோதிலும் ஆசைப்பட்ட மாதிரி சினிமாவுக்கு வந்துவிட்டாகிட்டது என்று பயங்கர சந்தோஷமாக இருந்தது.

தேவா பிரார்த்தனை: இதற்கிடையே பாடும் பறவைகள் படத்திற்கு இசையமைக்க அழைத்தார்கள். டி.எம். சௌந்தரராஜன், எஸ். ஜானகியை வைத்து பாடலை பதிவு செய்தோம். இரண்டு பாடல்களை பதிவு செய்த பிறகு ஆர்கெஸ்ட்ராவுக்கு பணம் கொடுக்க தயாரிப்பாளரை தேடினோம். தயாரிப்பாளர் கிளம்பிச் சென்று ரொம்ப நேரமாகிவிட்டது என்று பையன் சொன்னான். அதை கேட்டு என் நான்கு தம்பிகளும் அந்த இடத்திலேயே கதறி அழுதார்கள். நானும், தம்பிகளும் கோடம்பாக்கத்தில் இருந்து மயிலாபூருக்கு நடந்து சென்றோம்.

சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்

அப்பொழுது தான், எனக்கு நடந்தது மாதிரியான இந்த விஷயம் என் எதிரிக்கும் நடந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியிடம் பிரார்த்தனை செய்தேன் என்றார்.

Source link