தெருவில் துப்பாக்கியுடன் இறங்கி போதை பொருள் கும்பலை துரத்திய அமைச்சர்!

அமைச்சர் ஒருவர் கைத்துப்பாக்கியுடன் போதை பொருள் விற்பனை செய்யும் கும்பலை துரத்திய சம்பவம் வங்கதேசத்தில் அரங்கேறி இருக்கிறது.

பொதுவாக அமைச்சர்களின் ஆய்வு என்பது கேள்விகளுடன், விளக்கங்களுடன் தான் இருக்கும். அமைச்சர் கேட்கும் விவரங்களையும், அவரின் சந்தேகங்களையும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விளக்கிக் கூறுவர். அமைச்சரின் ஆய்வு இப்படித்தான் இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

ஆனால் வங்கதேசத்தில் சினிமா பாணியில் ஒரு சோதனை சம்பவம் பதிவாகி இருக்கிறது. தலைநகர் டாக்காவில் உள்ள கந்தாரியா ரயில்நிலையம் பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் போதைபொருள் விற்பனை மையம் செயல்படுவதாக கூறப்படுகிறது. இதையறிந்த அமைச்சர் இஸ்ராக் உசேன், தம்முடன் இருப்பவர்களுடன் அங்கு சென்றார்.

ஒரு கையில் ஒலிபெருக்கியையும், மறு கையில் துப்பாக்கி ஒன்றையும் ஏந்திய படி வாகனத்தில் இருந்து இறங்கிய அவர், திடீரென அங்கே இருந்த ஒரு கூட்டத்தினரை துரத்திச் சென்றார். அவருடன் இருந்த சிலரும் கைத்துப்பாக்கியுடன் துரத்திச் சென்ற அனைவரையும் பிடித்தனர்.

பின்னர் அங்கே இருந்த மக்களிடம் அமைச்சர் இஸ்ராக் உசேன் பேசுகையில், ‘நீங்கள் எல்லாரும் ஒரு நகரத்தையே பாழாக்கிக் கொண்டு இருக்கிறீர்கள். இங்கு அனைத்தையும் அழித்து வருகிறீர்கள். போலீசார் வருவார்கள்’ என்றார். அங்கு திரண்ட சிலர் நாங்கள் நிரபராதிகள், எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று அமைச்சரிடம் பதிலளித்தனர். போலீசார் வந்தவுடன் அனைத்தும் தெரிய வரும் என்று அமைச்சர் மீண்டும் பதிலளித்தார்.

சோதனைக்கு சென்ற அமைச்சர் இஸ்ராக் உசேன், துப்பாக்கியுடன் ஓடிய வீடியோவை தமது எக்ஸ் வலைதளத்தில் பதிவேற்றி இருக்கிறார். வீடியோ வைரலாகி விட்டாலும் அமைச்சர் ஒருவர் எப்படி துப்பாக்கியுடன் துரத்தி மிரட்டி பிடிக்கலாம், என்ன அதிகாரம் இருக்கிறது என கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

Source link