சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் வானிலை நிலவரம் முற்றிலும் மாறியது. மொத்தம் 6 இடங்களில் அதி கனமழை(200 மிமீ.க்கு மேல்), 12 இடங்களில் மிக கனமழையும்(115 மிமீ.க்கு மேல்) பதிவானது. அதிகளவாக பாரிமுனையில் 361 மிமீ மழை பெய்தது.
சாலைகளில் தேங்கிய மழைநீரை, சென்னை மாநகராட்சி ஊழியர்கள், களப்பணியாளர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இரவு, பகலாக அகற்றி வருகின்றனர். தேசிய மற்றும் தமிழக பேரிடர் மீட்பு படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மழை இன்றும் தொடரும், அதிகன மழையாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. வானிலை மையத்தின் அறிவிப்பை அடுத்து, தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை மையம் சென்னை மக்களுக்கு அலர்ட் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி இருக்கிறது.
அதில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது;
மிகவும், தீவிரமான எச்சரிக்கை. சென்னையில் இன்று அதிகனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும். அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றவும்.
இவ்வாறு குறுஞ்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
