திருச்செந்துார் கோவிலுக்கு சொந்தமான ரூ.20 கோடி நிலம் ஆக்கிரமிப்பு; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

நமது நிருபர்

துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான, 60 ஏக்கர் நிலம் கோவிலை சுற்றி அமைந்துள்ளது. அந்த நிலங்களை, பலர் குத்தகைக்கு எடுத்து பயன்படுத்தி வரும்நிலையில், சிலர், அரசியல்வாதிகள், அதிகாரிகள் உதவியுடன், குத்தகை காலம் முடிந்தும், நிலத்தை கோவிலுக்கு கொடுக்காமல், ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து, பக்தர்கள் கூறியதாவது: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான, 20 கோடி ரூபாய் மதிப்புள்ள, 20 சென்ட் நிலத்தை, 2020ல் ‘சின்னத்துரை அண்டு கோ’ என்ற ஜவுளி நிறுவனத்தினர், ஆண்டு குத்தகைக்கு பெற்ற நிலையில், கோவில் நிர்வாகம், நிலத்தை திரும்ப ஒப்படைக்கும்படி கூறியது.

ஆனால், ஜவுளிக்கடை நிறுவனத்தினர், நிலத்தை திரும்ப கொடுக்காமல், பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்பால், அந்த இடத்தில், கோவில் நிர்வாகம் சார்பில், 2024ல் கட்டி முடிக்கப்பட்ட பக்தர்கள் தங்கும் விடுதி, கழிப்பறைகளை, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியாத நிலை உள்ளது.

நிலத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் முன், வழக்கு தொடரப்பட்டும், அரசியல் செல்வாக்கால், கடந்த ஆட்சியில், அதிகாரிகள், நிலத்தை மீட்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், கோவில் நிர்வாகம், அந்த நிலத்தை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link