“தேவையில்லாமல் யாரும் வெளியே வராதீங்க…” – அமைச்சர் அருண்ராஜ் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தொடர்ச்சியாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை மற்றும் அதி கனமழை பெய்தது. இந்த மழை நள்ளிரவு முழுவதும் நீடித்து சென்னையைப் புரட்டி போட்டது. இதனால் சாலையில் வெள்ளம், கடும் போக்குவரத்து நெரிசல், மழை நீருடன் கழிவுநீர் கலப்பு என ஏகப்பட்ட பிரச்சனைகள் உருவாகியது.

இதனால் மழையை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு குழு சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. மேலும், மழை நீரை வெளியேற்றும் பணி தீவிரமடைந்து வருகிறது. இதற்கிடையில், இன்று (18-10-26) சென்னையில் அதிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென்மேற்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாகவும் இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகளுக்குள் மழைநீர் புகாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே போல், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தடையின்றி கிடைக்க வழிவகை செய்யப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 1000 மருத்துவ முகாம்கள் நடந்துக் கொண்டிருக்கிறது. சென்னையில் மட்டும் இன்று 40 முகாம்கள் நடைபெற்றது. ஒவ்வொரு மருத்துவ முகாம்களும் நிலவேம்பு கசாயம் கொடுக்கப்படுகிறது. 

நேற்று 30 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு மூன்று மணி நேரத்திற்குள் 36 செ.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது. எந்தவித முன்னெச்சரிக்கையும் வரவில்லை. இருப்பினும் இன்று காலை இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறது. அதற்கு காரணம் முதல்வர் விஜயின் வழிகாட்டின்படி அனைத்து துறை அதிகாரிகளும் சரி, அமைச்சர்கள் நாங்களும் சரி தொடர்ந்து இரவு முழுவதும் களத்தில் நின்று பணிகளை மேற்கொண்டோம். இவ்வளவு கனமழை பெய்தும் எந்தவித முன்னெச்சரிக்கை இல்லாத போதும் கூட சிறப்பான முறையில் கையாண்டிருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.