சமீபத்தில் பிற மதத்தில் இருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறியவருக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் என்று சாதி சான்றிதழ் வழங்கும் தமிழக அரசின் அரசாணையை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டது. இவர்கள் வெறும் முஸ்லிமாக மட்டுமே கருதப்படுவார்கள் என்று தெரிவித்தது.
கண்ணாடி மேற் கூரையுடன் குருவாயூர் ரயில்: மேற்கு தொடர்ச்சி மலை அழகை ரசித்தபடி செல்ல தமிழகப் பயணிகளுக்கு சூப்பர் வாய்ப்பு; இப்பவே டிக்கெட் புக் பண்ண ரெடி ஆகுங்க
இதைத்தொடர்ந்து, உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.கே. மிஸ்ரா மற்றும் ஸ்ரீ சந்திரசேகர் அடங்கிய அமர்வு முஸ்லிம் மதத்திற்கு மதம் மாறிய ஒருவர் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுப் பலன்களைப் பெற உரிமை இல்லை என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. இந்து மதத்தில் இருந்து வேறு மதத்துக்கு மாறுபவர்கள், இத்தகைய இட ஒதுக்கீட்டு சலுகைகளை பெற முடியாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாக கூறிவிட்டனர்.
இந்நிலையில், முஸ்லிம் மதத்திற்கு மாறிய இந்துக்களின் இட ஒதுக்கீடு குறித்த அரசாணை சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இஸ்லாம் மதத்துக்கு மாறியவர்கள் இட ஒதுக்கீடு சலுகையை அனுபவிக்க முடியாது என்ற வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சரியாக வாதிடவில்லை எனக் கூறுவது தவறானது. இது தொடர்பாக இஸ்லாமிய கட்சியினர் மற்றும் நவாஸ்கனி எம்.பி உள்ளிட்ட அனைவரையும் கலந்து ஆலோசித்துத்தான் முடிவெடுத்தோம்.
சட்டத் திருத்தம் செய்யலாமா அல்லது அப்பீல் போவோமோ என அனைத்து தரப்பினரின் கருத்துகளை கேட்டு ஆலோசித்த பின்புதான் அப்பீல் சென்றோம். முதலமைச்சர் விஜய் ஒப்புதலுடன் மீண்டும் சட்டத் திருத்தம் செய்யவுள்ளோம். அரசாணை கொண்டுவந்தபோதே சிறு சட்டத் திருத்தம் செய்திருந்தால் போதும். அதனை முந்தைய ஆட்சியாளர்கள் செய்யத் தவறிவிட்டனர் என்றார்.
மெத்த பெட்டமைன் போதைப்பொருள் வழக்கில் த.வெ.க நிர்வாகி கைது செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு, தி.மு.க அரசின் 5 ஆண்டுகால ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
“இதுவே தி.மு.க ஆட்சியில் நடந்திருந்தால், பறிமுதல் செய்யப்பட்டது மெத்தபெட்டமைன் அல்ல, கோலப்பொடி என்று கூறி பிரச்சினையை திசைதிருப்பியிருப்பார்கள்” என்று அவர் சாடினார்.
