மதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ இன்று (19-10-26) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “இன்றைக்கு விஸ்வரூபம் எடுத்திருக்கக்கூடிய பிரச்சனை வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம். மிக கொடூரமான அச்சுறுத்துகின்ற பின்னடைவு, இது தான் எஸ்.ஐ.ஆர். 13 கோடி 30 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் பட்டியலில் இருந்து விடுபட்டு போய்விட்டதாக விவரங்கள் தரப்பட்டிருக்கின்றன. இது வாக்காளர்களுடைய ஜனநாயக உரிமையை பறிக்கிற விதத்தில் அமைந்திருக்கிறது. 2 தேர்தல் ஆணையர்கள் 14 முறை பிரச்சனைகளில் ஆட்சேயபனை தெரிவித்திருக்கிறாக்ரள். ஆனால் அதை நிராகரித்துவிட்டு எதேச்சதிகாரமாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானே குமார் இந்த ஜனநாயக படுகொலைக்கு காரணமாக இருக்கிறார்.
இப்படி நீக்கப்பட்டதன் காரணமாகத்தான் தேர்தலில் தோல்விகள் ஏற்பட்டன என்ற விமர்சனமும் இயற்கையாக வைக்கப்படுகிறது. நான் ஒன்றில் மாறுபடுகிறேன். தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார்கள் என்றால் இந்த வாக்காளர் பட்டியலை தீவிர திருத்தம் செய்கிற அந்த காலகட்டத்தில் தமிழ்நாடு முழுவதிலும் திமுக தோழர்கள் தான் உடனிருந்திருக்கிறார்கள். அவர்கள் தான் இதை நீக்குங்கள், அதை நீக்குங்கள் என அதிகாரிகளுக்கு சொல்லிருக்கிறார்கள். திமுகவினருக்கு முழு திருப்தியான பிறகு இவர்கள் விரும்பியபடி 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டார்கள். அதனால் தான் தொடக்கத்தில் எஸ்.ஐ.ஆரை திமுக எதிர்க்கவில்லை. நாடே கொந்தளித்து ராகுல் காந்தி உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் எல்லோரும் ஓங்கி குரல் கொடுத்தது. ஆனால் திமுக தொடக்கத்தில் மெளனம் கடைபிடித்துவிட்டு இப்போது எஸ்.ஐ.ஆர் பெரும் கேடு, ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று கூறுகிறார்கள்.
தமிழகத்தில் 97 லட்சம் பேர் நீக்கப்பட்டார்கள் என்றால் அதற்கு முழுக்க முழுக்க பொறுப்பேற்க வேண்டியது திராவிட முன்னேற்ற கழகம் தான். எல்லா ஊர்களிலும் அவர்கள்தான் உடனிருந்து அந்த வாக்காளர் பட்டியல் சரிபார்த்தார்கள். ஆகவே அவர்கள் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்கள். இன்றைக்கு அவர்களும் மற்றவர்களோடு சேர்ந்து கொண்டு எஸ்.ஐஆரை நாங்கள்தான் தீவிரமாக எதிர்க்கிறோம் என்கிறார்கள். அவர்கள் தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். இது ஜனநாயக படுகொலை. இந்த பிரச்சனைக்கு காரணம் திமுக தான்” என கொந்தளித்துப் பேசினார்.
