எலான் மஸ்க் சர்ச்சை: ரிலையன்ஸ் நகருக்கு செல்லும் மார்கோ ரூபியோ; ஜெய்சங்கருடன் மும்பையில் அவசர சந்திப்பு

எழுதியவர்: சுபஜித் ராய்

விசா கட்டுப்பாடுகள் மற்றும் வரி விதிப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவில் பதற்றம் நிலவி வரும் சூழலில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இந்தியாவிற்கு வருகை தருகிறார்.

ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்க

செவ்வாய்க்கிழமை பிற்பகலில் மும்பையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் அவர் நடத்தும் சந்திப்பானது, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை சீரமைப்பதற்கான ஒரு முயற்சியாக பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பின் போது ஆற்றல், வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு, முக்கிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்து இரு தரப்பும் விவாதிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜி20  தலைவர்கள் உச்சிமாநாட்டிற்காக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்வார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த சந்திப்பு அவரது பயணத்திற்கான முதற்கட்டப் பணிகளுக்கு அடித்தளமிடும் என்று கூறப்படுகிறது.  

 மார்கோ ரூபியோவும் ஜெய்சங்கரும் சந்திக்கும் இடமாக மும்பை தேர்வு செய்யப்பட்டிருப்பது, அங்குள்ள இந்திய தொழிலதிபர் பிரமுகர்களை ஈர்ப்பதற்கான ஒரு முயற்சியாக பார்க்கப்படுகிறது. 5 மாதங்களுக்கும் குறைவான இடைவெளியில் மீண்டும் இந்தியாவிற்கு வரும் ரூபியோ, டெல்லிக்கு செல்லவில்லையாம், அதற்கு பதிலாக, அவர் புதன்கிழமை ஜாம்நகருக்கு செல்ல உள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, ரூபியோ செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.15 மணியளவில் மும்பைக்கு வருகை தருவார், மேலும் மாலை 4 மணியளவில் ஜெய்சங்கரைச் சந்திப்பார். தாஜ் பேலஸ் ஹோட்டலில் உள்ள 26/11 நினைவுச் சின்னத்திற்கு அஞ்சலி செலுத்தும் அவர், யு.எஸ் @ 250  ‘US @250’ நிகழ்விலும் கலந்து கொள்கிறார்.

ரிலையன்ஸ் சுத்திகரிப்பு ஆலை அமைந்துள்ள ஜாம்நகருக்கான அவரது பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தில் வலுவான கூட்டாளியாக உள்ள அமெரிக்க கோடீஸ்வரர் எலான் மாஸ்க், தங்களது ஆதிக்கத்தை தக்கவைத்துக்கொள்ள சில தொழிலதிபர்கள் முயல்வதால் தான் இந்தியாவில் தனது ‘ஸ்டார்லிங்க்’ செயற்கைக்கோள் தகவல் தொடர்பு நிறுவனத்தின் அறிமுகம் தாமதமாகிறது என்று குற்றம் சாட்டியிருந்தார். “இந்தியாவின் உண்மையான முதலாளி அம்பானியா?” என்று மாஸ்க் எக்ஸ்  தளத்தில் சமீபத்தில் பதிவிட்டிருந்தார்.

இரு நாடுகளுக்கும் இடையே முன்மொழியப்பட்டுள்ள வர்த்தக ஒப்பந்தம் குறித்து இந்திய தொழிலதிபர்களின் கவலைகளை ரூபியோ தணிப்பார் என்றும், இந்திய சந்தையின் சாத்தியக்கூறுகளைப் பயன்படுத்தி கொள்ள அமெரிக்க மற்றும் இந்திய தொழில்கள் இரண்டிற்கும் போதுமான இடம் உள்ளது என்பதை வலியுறுத்துவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த சூழலில், இந்தியாவின் வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தின் ஆற்றல் தேவைகள் ஒரு முக்கிய உதாரணமாகும். அங்கு இந்திய சந்தையில் உள்ள அதிக ஆற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்ய ரஷ்ய மற்றும் வளைகுடா விநியோகங்களுடன் அமெரிக்க ஆற்றல் விநியோகமும் துணையாக இருக்க முடியும் என்று கூறப்படுகிறது. 

சீனா மீண்டும் முக்கிய தொழில்நுட்பங்களை கட்டுப்படுத்தி வரும் இந்த வேளையில், இரு நாடுகளுக்கும் இடையிலான தொழில்நுட்பக் கூட்டாண்மை மற்றும் விநியோகச் சங்கிலிகளின் ஸ்திரத்தன்மையின் முக்கியத்துவம் குறித்தும் இரு தரப்பும் பேசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் 16 -18 தேதிகளில், சீனாவின் வர்த்தக அமைச்சகமும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகமும் இணைந்து, தடைசெய்யப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்ட ஏற்றுமதிப் பொருட்களின் பட்டியலில் 40 தொழில்நுட்பங்களைச் சேர்ப்பதற்கான வரைவு முன்மொழிவை வெளியிட்டன. இதில் ஏ.ஐ,  சோலார் உற்பத்தி மற்றும் செல் மற்றும் மரபணு சிகிச்சை தொழில்நுட்ப தளங்களை இலக்காக கொண்ட பயோமெடிசின் ஆகியவை அடங்கும்.

தகவல்படி,  இரு தரப்பும் பாதுகாப்பு விற்பனை மற்றும் கூட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கான முயற்சிகள் குறித்து விவாதிக்கும். முக்கியமாக அமெரிக்கா குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப நன்மைகளை கொண்டுள்ள வான் மற்றும் கடல் சார்ந்த துறைகளில் இது இருக்கும். தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இரு அமைச்சர்களும் விவாதிப்பார்கள். இது இந்தியத் தரப்பிலிருந்து ஒரு முக்கிய கோரிக்கையாக உள்ளது. மேலும், அமெரிக்காவிடமிருந்து இந்தியா மேற்கொள்ளும் பாதுகாப்பு பொருட்கள் கொள்முதலில் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை எவ்வாறு இணைப்பது என்பது குறித்தும் இரு தரப்பும் ஆராய்ந்து வருகின்றன என்று கூறப்படுகிறது.

இந்தியா – அமெரிக்க உறவில் சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ள  இடப்பெயர்வு கட்டுப்பாடுகள் குறித்தும் ரூபியோ – ஜெய்சங்கர் இருதரப்பு பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய தொழிலதிபர்களும் திறமையான வல்லுநர்களும் அமெரிக்க பொருளாதாரத்திற்கு எவ்வாறு பங்களித்துள்ளனர் என்பதை இந்தியத் தரப்பு சுட்டிக்காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூபியோ கடைசியாக இந்த ஆண்டு மே மாதம் டெல்லிக்கு வந்திருந்தார். அப்போது அவர் குவாட் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த முறை, இந்தியப் பயணத்திற்கு பிறகு ஆஸ்திரேலியாவில் திட்டமிடப்பட்டிருந்த குவாட் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Source link