தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர் அமைப்புகள் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றன. அந்த வகையில், சிஜேபியும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், கடந்த அக்டோபர் 10 மற்றும் 11 ஆகிய நாட்களில் சிஜேபி சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
ஆனால், இந்த போராட்டத்தை ஒடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அதையும் மீறி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர். இந்நிலையில், தடையை மீறி போராட்டத்தில் கலந்துகொண்ட சிஜேபி நிர்வாகிகள் அசுதோஷ் ரங்கா மற்றும் சவுரவ் தாஸ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை 5 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தன. இந்நிலையில், இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரியும் மீண்டும் சிஜேபி சார்பில் தேசியக் கொடி ஏற்றும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளக் கலந்துகொள்ள கூடாது என சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கேவை காவல்துறையினர் எச்சரித்தனர். இருப்பினும், தடையை மீறி போராட்டத்தில் கலந்துகொண்டதால் அவரும் கைது கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது. ஆனாலும், அசுதோஷ் ரங்கா மற்றும் சவுரவ் தாஸ் ஆகியோரின் நீதிமன்ற காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளன.
இதற்கு கடும் கண்டங்களைத் தெரிவித்த சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே, பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைத்தளப்பக்கத்தில், ”சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ஆகியோர் செய்த குற்றம் என்ன? தேசியக் கொடியை ஏந்தியது தான். அவர்கள் செய்த தவறு என்ன? போராட்டத்திலிருந்து பின்வாங்காதது தான். அவர்களைச் சிறையில் அடைத்துவிட்டதால், இளைஞர்கள் மீது வன்முறைச் சம்பவம் நடத்தி விட்டதால் நரேந்திர மோடி தன்னை வலியானவராகக் காட்டிக்கொள்ள நினைக்கலாம். ஆனால், அது தைரியம் அல்ல. பயத்தின் உச்சகட்டம். இத்தனை நாட்கள் சிறையில் இருந்தும், அசுதோஷ் மற்றும் சவுரவ் ஆகியோர் சிரித்த முகத்துடன் நீதிமன்றத்திற்கு வருகிறார்கள். அது தான் தைரியம். யாரையும் அளவுக்கு அதிகமாகப் பயமுறுத்த முடியாது. அப்படிச் செய்தால் அவர்களிடம் இருக்கும் மொத்த பயமும் போய்விடும். நீங்கள் இந்த நாட்டின் இளைஞர்களை உங்களால் முடிந்தவரை அச்சுறுத்திவிட்டீர்கள். எங்களுக்கு இருந்த பயம் இப்போது காணாமல் போய்விட்டது. இனி நாங்கள் பயப்பட மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.
