ரயிலில் பயணங்களின் போது அதிக சத்தத்துடன் பாடல்களைக் கேட்பது, வீடியோக்களை பார்ப்பதற்கு தெற்கு ரயில்வே தடை விதித்துள்ளது. மீறுபவர்களுக்கு அபராதத்துடன் கூடிய சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய காலகட்டங்களில் ரயில் பயணங்களின்போதும், ரயில் நிலையங்களில் இருக்கும்போதும் பயணிகள் செல்போன்கள் மூலம் அதிக ஒலியுடன் பாடல்கள் கேட்பது, வீடியோக்கள் பார்ப்பது அதிகரித்து வருகிறது. இது அருகிலுள்ள இதர பயணிகளுக்குத் தொல்லையாக இருக்கும் என்பதால், இத்தகைய செயல்களுக்கு ரயில்வே திருத்தச் சட்டத்திற்கு இணங்க அபராதத்துடன் கூடிய தண்டனை விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து, ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் அறிவிப்புகள் வெளியிடப்படும். இந்த விழிப்புணர்வு வாசகம் இந்தி, ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழிகளில் இருக்கும். அதில், பயணிகள் ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்துமாறும், உரத்த குரலில் பேசும் தொலைப்பேசி அழைப்புகளைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுவார்கள்.
அதன்படி, பயணத்தின்போது மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்றும், அவர்கள் ரயிலிலிருந்தோ அல்லது ரயில் நிலையத்திலிருந்தோ வெளியேற்றப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், மீண்டும் மீண்டும் இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ரூ.5,000 வரை அபராதமும், ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும், அபராதம் விதிக்கும் அதிகாரம் ரயிலில் பணியில் இருக்கும் டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் வணிகப் பிரிவின் மூத்த அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சக பயணிகளுக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கவும், அவர்களை ரயில் பெட்டியிலிருந்து வெளியேற்றவும் பொதுவான விதி ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. எனினும், செல்போன்கள் மூலமாக இடையூறு ஏற்படுத்தும் பயணிகளுக்கும் தற்போது தண்டனை அறிவித்திருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.
