உலக தலைவர்களில் மிக முக்கியமானவராகவும், பிற நாடுகள் உற்று நோக்கும் தலைவராகவும் அறியப்படுபவர் வட கொரிய அதிபர் ‘கிம் ஜாங் உன்’. இவர், சமீபத்தில் உடல் நலக்குறைவால் உயிர் இழந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன.
இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வடகொரிய அரசு ஊடகங்கள் முக்கிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அதிபர் கிம் ஜாங் உன் நலமுடன் இருப்பதாகவும், அவரது உடல்நிலை அல்லது மரணம் குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகி வரும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிம் ஜாங் உன் சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றின் புகைப்படங்களும் வெளியாகின. அதில், கிம் ஜாங் உன் தனது மனைவி மற்றும் மகளுடன் ’ஆடை மற்றும் காலணி’ கண்காட்சி ஒன்றைப் பார்வையிடுவது போன்ற புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சமீபத்தில் எக்ஸ் தளப்பக்கத்தில் சமூக ஆர்வலர் ஒருவர், “வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மூளை ரத்தக் கசிவு காரணமாக உயிர் இழந்துவிட்டார்” எனப் பதிவிட்டிருந்தார். அதே நேரத்தில், ”அவர் கோமா நிலைக்குச் சென்றுவிட்டார்” எனவும் சில தரப்பினர் செய்திகளை சமூக ஊடகங்களில் பரப்பினர். இந்த செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஊடகங்கள் புகைப்படத்துடன் கூடிய ஆதாரத்தை வெளியிட்டுள்ளன.
இதனிடையே, கிம் ஜாங் உன் இறந்துவிட்டதாகக் கூறப்படும் வதந்திகளுக்கு எந்தவொரு நம்பகமான ஆதாரமும் இல்லை என்று தென்கொரிய உளவு அமைப்புகளும், சர்வதேச கண்காணிப்பாளர்களும் தெரிவித்துள்ளனர். மேலும், வட கொரிய அதிபர் நீண்ட நாட்களாகப் பொது வெளியில் வராதபோது, இது போன்ற வதந்திகள் பரவுவது வழக்கமான ஒன்று என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
