டெல்லி ரகசியம்: ராகுல் காந்தி வெளிநாடு பயணம் முதல் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் வரை: முக்கிய நிகழ்வுகள்

பண்டிகை கால இடைவேளையை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியட்நாம் பயணம் மேற்கொள்வது முதல், பசிபிக் தீவு நாடுகளில் பருவநிலை மாற்றத்தின் நேரடி தாக்கத்தை மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் நேரில் கண்டறிந்தது வரை இந்தியன் எக்ஸ்பிரஸின் டெல்லி ரகசியம் பகுதியின் முக்கிய நிகழ்வுகளை பார்ப்போம்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: 

01. இடைவேளையும் ஓய்வும் (Pause & Break)

பண்டிகை வாரத்தின் காரணமாக ‘இந்தியா’ (INDIA) கூட்டணியின் போராட்ட திட்டங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குறுகிய கால ஓய்வுக்காக வெளிநாடு சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள கோவாவில், ஞாயிற்றுக்கிழமை அன்று காங்கிரஸின் ‘கோய் ராகோன் யாத்திரை’யில் (Goy Rakhon Yatra) பங்கேற்ற ராகுல் காந்தி, அங்கிருந்து வியட்நாமுக்கு புறப்பட்டுச் சென்றதாகத் தெரிகிறது. 

இது குறித்து கட்சித் தலைவர்களின் கூற்றுப்படி, அவர் நான்கு நாட்கள் அங்கு இருப்பார் என்று கூறியுள்ளனர். கடந்த இரண்டு வாரங்களாக டெல்லியில் ‘இந்தியா’ கூட்டணியின் தெருமுனைப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கி, எதிர்க்கட்சி முகாமிற்குப் புத்துயிர் அளித்து, காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகப்படுத்திய ராகுல், ஓரிரு முறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

02. பசிபிக் பேச்சுவார்த்தைகள் (Pacific Parleys)

மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் மற்றும் அமைச்சக அதிகாரிகள் சமீபத்தில் பசிபிக் பெருங்கடலில் உள்ள சிறிய தீவு நாடுகளான பிஜி (Fiji) மற்றும் துவாலுவுக்கு (Tuvalu) மேற்கொண்ட பயணம், அக்குழுவினருக்கு மிகவும் கவலையளிக்கும் அனுபவமாக அமைந்தது. தாழ்வான பகுதியில் அமைந்துள்ள இந்த இரு நாடுகளும், குறிப்பாக துவாலு, கடல் மட்டம் உயர்வதால் பெரும் அச்சுறுத்தலைச் சந்தித்து வருகின்றன. 
இதன் காரணமாக பூபேந்தர் யாதவ் தலைமையிலான குழுவினர் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை நேரில் கண்டறிந்தனர். ஐ.நா.வின் வருடாந்திர பருவநிலை மாற்ற மாநாட்டிற்கு முன்னதாக நடத்தப்பட்ட கூட்டங்கள் தொடர்பாக இந்தப் பயணம் அமைந்தது. மேலும், அந்த தீவு மக்களின் சிறப்பான உபசரிப்பும் அக்குழுவினருக்கு வழங்கப்பட்டது.

03. முக்கியமான வாரம் (Crucial Week)

மத்திய இணை அமைச்சராக இருந்த எல்.முருகன் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படுவது குறித்த அடுத்தகட்ட ஊகங்களைத் தூண்டியுள்ளது. இந்த நடவடிக்கை நடப்பதற்கான சாத்தியமான தேதிகள் குறித்து அதிகார மையங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. நவம்பர் முதல் வாரம் பாஜகவிற்கும் அரசாங்கத்திற்கும் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர். 

காங்கிரஸ் தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி நவம்பர் 1 அன்று ஒரு பெரிய பேரணிக்குத் தயாராகி வரும் நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவை (Delimitation Bill) நிறைவேற்றுவதற்குத் தேவையான எம்பிக்களின் எண்ணிக்கையைத் திரட்டுவதற்கான திட்டத்திற்கு இறுதி வடிவம் கொடுப்பதில் பாஜக மேலிடம் தீவிரமாகப் பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது. 
நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள அமைச்சரவை மாற்றத்திற்கும் இந்த வாரம் ஒரு வாய்ப்பாக அமையலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இவற்றுள் ஏதேனும் ஒன்றோ அல்லது இரண்டோ எதிர்க்கட்சிகளின் திட்டங்களைத் தவிடுபொடியாக்கிவிடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

04. நவராத்திரி விருந்து (Navratri Feast)

‘மாமா’ என்று அன்போடு அழைக்கப்படும் மத்திய விவசாயத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான், ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரியின் போது போபாலில் உள்ள தனது இல்லத்தில் ‘கன்யாபோஜ்’ (பெண் குழந்தைகளுக்கான சிறப்பு விருந்து) உபசரிப்பை நடத்துவது வழக்கம். இருப்பினும், இந்த ஆண்டு இந்த நிகழ்வு குழந்தைகளுக்கு பாரம்பரியத்தைப் பற்றி விளக்குவதற்கான ஒரு வாய்ப்பாகவும் அமைந்தது. 

அப்போது ‘கன்யாபோஜ்’ ஏன் நடத்தப்படுகிறது என்று ஒரு சிறுமி கேட்டபோது, சௌஹான் இந்து புராணங்களிலிருந்து கதைகளைக் கூறி அதன் முக்கியத்துவத்தை அவருக்கு விளக்கினார்.

Source link