ஆயுத பூஜைக்குப் பெரியார் அறிவுலகத்திற்கு விடுமுறை – டி.ஆர்.பி. ராஜா கடும் விமர்சனம்!

கோவை மாவட்டம் காந்திபுரத்தில் கடந்த திமுக ஆட்சியில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட ‘பெரியார் அறிவுலகம்’ மற்றும் அறிவியல் மையத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடந்த 16ஆம் தேதி (16.10.2026) திறந்து வைத்தார். சுமார் 1.98 லட்சம் சதுர அடிப் பரப்பளவில் தரை மற்றும் ஏழு தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் பெரியார் அறிவுலகத்துக்கு ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

இது தொடர்பாக பெரியார் அறிவுலகத்தில் நுழைவு வாயில் ஒட்டப்பட்டுள்ள அறிவிப்பில், “ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி அரசு விடுமுறையை முன்னிட்டு 19.10.2026, திங்கட்கிழமை மற்றும் 20.10.2026, செவ்வாய்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் பெரியார் அறிவுலகத்திற்கு விடுமுறை என அறிவிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் தொழில்துறை அமைச்சரும், திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளருமான டி.ஆர்.பி. ராஜா எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆயுத பூசைக்கு பெரியார் அறிவுலகத்திற்கே ‘லீவு விட்ட’ அறிவார்ந்த ஆட்சி இன்றைய த.வெ.க ஆட்சி!  பேஷ்! பேஷ்! 

ஆனால், அறிவாலயத்துக் கலைஞர் திறந்து வைத்த அண்ணா நூற்றாண்டு நூலகம் இன்றும் திறந்திருக்கிறது! அது சரி அறிவுக்கு விடுமுறை விட்டிருக்கும் ஆட்சியில் இது அதிசயம் அல்லவே. திமுக ஆட்சியில் கட்டப்பட்டு, இன்றைய த.வெ.க. ஆட்சியால் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பெரியார் அறிவுலகத்தின் கதவுகள் இன்று மூடப்பட்டிருக்கும் நிலையில் திமுக ஆட்சியில் கட்டப்பட்டு, கலைஞர் திறந்து வைத்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் கதவுகள் இன்றும் (20.10.2026) திறந்திருக்கின்றன. கலைஞரின் இல்லக் கதவுகளைப் போலவே என்றும் மக்களுக்காக! அறிவாலயத்துத் தலைவர் அல்லவா!” எனக் குறிப்பிட்டுள்ளார்.