சிங்கப்பூர் அப்துல்கலாம் இலட்சிய கழகத்தின் சார்பில் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி மேதகு அப்துல் கலாம் அவர்களின் 95-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் சிங்கப்பூரில் எழுச்சிகரமாக நடைபெற்றது. இதில் சிங்கப்பூரின் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ் குமார் திவாரி, இஸ்ரோ விஞ்ஞானி Dr. மயில்சாமி அண்ணாதுரை ஆகியோருடன் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களும் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரை வழங்கினார்கள்.
முன்னதாக தமிழ் மேளதாளங்களுடன் அனைவருக்கும் வரவேற்பளிக்கப்பட்டது.ஆரம்ப பள்ளிக்கூடங்களில் படிக்கும் 20 மாணவ, மாணவிகள் அப்துல் கலாமின் ஒவ்வொரு பொன்மொழிகளையும் எடுத்துரைத்து; அதற்குரிய விளக்கங்களையும் உணர்வு பூர்வமாக கூறிய பொழுது அரங்கம் கைத்தட்டல்களால் நிரம்பியது.நிகழ்ச்சியில் உயர்நிலையில் படிக்கும் 3 மாணவ, மாணவிகளுடன் உங்களுக்கு கலாமிடம் பிடித்தது என்ன? என்ற தலைப்பில் பிரபல ஊடகவியலாளரான முகமது அலி அவர்கள் ஒரு கலந்துரையாடலை முன்னெடுத்தார்.
இந்நிகழ்வில் பேசிய நியமன நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ் குமார் திவாரி அவர்கள், கலாமின் அறிவியல் பார்வைகளையும்; இந்தியாவின் முன்னேற்றத்திற்கு அவர் ஆற்றிய சேவைகளையும் எடுத்துக் கூறினார். விஞ்ஞானி Dr. மயில்சாமி அண்ணாதுரை அவர்கள், தனக்கும் அப்துல்கலாம் அவர்களுக்கும், இடையிலான தொடர்பு குறித்து Power point மூலம் விளக்கி சிறப்பாக உரையாற்றினார். அது நல்ல உதாரணங்களுடன் கூடிய உரையாகவும், அரிய விண்வெளி அறிவியலை எளிய மொழியில் விளக்கும் பயனுள்ள வகுப்பாகவும் இருந்தது. அதை அனைவரும் அமைதியாக உன்னிப்பாக கவனித்தனர்.
தனது ஒவ்வொரு அறிவியல் முன்னேற்றத்திலும் கலாமின் ஆதரவும், ஊக்கமும் எவ்வாறு இருந்தது என்பது குறித்தும் விரிவாக- சிறப்பாக உரையாற்றினார்.தனது நூலுக்கான அணிந்துறையில் தன்னை கலாம் பாராட்டியதை குறிப்பிட்டவர், அதற்கு நிகரான விருதும்; சிறப்பும் தனக்கு வேறு எதுவும் இல்லை என்று சிலாகித்துக் கூறினார். தனது உரையின் நிறைவாக பேசும் போது, அவர் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களை சுட்டிக்காட்டும்போது, கலாம் இளம் தலைவர்களை விரும்பினார் என கூறி; அரசியலில் நம்பிக்கைக்கும், நம்பிக்கையின்மைக்கும் இடையில் அவர் நம்பிக்கை அளிப்பதாக கூறினார்.
மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி MLA., பேசும்போது கலாம் குறித்து பல புதிய செய்திகளை கூறினார். அவை பின்வருமாறு…. உலகம் இந்தியாவை இரண்டு கண்கொண்டு பார்க்கும். அதில் ஒரு கண் காந்தியின் வழியாக பார்க்கும். இன்னொரு கண் அப்துல் கலாமின் வழியாக பார்க்கும். பெர்னாட்ஷா பேசப்படுவது போல் எதிர்காலத்தில் அப்துல் கலாமும் உலகம் எங்கும் பேசப்படுவார்.
அப்துல் கலாமின் பொன்மொழிகளை இங்கு மாணவ- மாணவிகள் சிறப்பாக எடுத்துக் கூறினார்கள். அந்த பொன்மொழிகளை ரசிக்கும் போது அவர்களது உடல் மொழியையும் ரசித்தேன். அதில் தமிழ் உணர்வு இருந்தது.அவர் அடக்கம் செய்யப்பட்டுள்ள ராமேஸ்வரத்தில் உள்ள அவரது சமாதிக்கு சென்ற பொழுது; அங்கு எழுதப்பட்டிருந்த அவரது ஒரு பொன்மொழி என்னை மிகவும் ஈர்த்தது. ‘வாழ்க்கையில் வெற்றி பெற நல்ல நண்பர்கள் தேவை. வாழ்நாளெல்லாம் வெற்றி பெற ஒரு எதிரியாவது தேவை’ என அவர் கூறிய பொன்மொழியை எழுதி வைத்திருந்தார்கள். (பலத்த கைத்தட்டல்)அது எங்களைப் போன்றவர்களுக்கு எப்போதும் உற்சாகத்தை தருகிறது.
கலாமை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் நேசிப்பார்கள்.
சிலர் அவரது அறிவியல் அறிவுக்காக நேசிப்பார்கள். சிலர் அவரது வாழ்வியலுக்காக நேசிப்பார்கள்.
நான் அவரைப் பற்றி அறிந்த சிறப்பு இயல்புக்காக நேசிக்கிறேன்.
ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக அவர் வெளியே புறப்படும் போது, இரண்டு பேர் ஓடி வருகிறார்கள். ஜனாதிபதியின் காலுக்கு ஷூவை அணிவிக்கும் வேலை அவர்களுடையது. தனது காலைத் தொட்டு ஷூவை அணிவிப்பது அந்த தொழிலாளிகளின் சுயமரியாதைக்கு எதிரானது என கலாம் சிந்திக்கிறார். உங்களுக்கு இனி இந்த வேலை இல்லை என்கிறார். அவர்கள் நாம் வேலை இழப்புக்கு ஆளாகி விடுவோம் என அஞ்சுகிறார்கள்.
இன்று முதல் எனது ஷூவை நானே அணிந்து கொள்கிறேன். உங்களுக்கு இதே மாளிகையில் வேறு வேலைகள் உண்டு என்கிறார். அவர் தான் கலாம்! (கைத்தட்டல்). ஒருநாள் ஜனாதிபதி மாளிகையை கலாம் சுற்றி பார்க்கிறார். அங்கு இரண்டு சமையலறைகள் இருப்பதை அறிகிறார். ஒன்று அவருக்கு உணவு தயாரிக்கும் சமையல் கூடம். இன்னொன்று அங்கு பணிபுரிபவர்களுக்கு உணவு தயாரிப்பதற்கான சமையல் கூடம்.
உடனே அவர் சொல்கிறார்… இரண்டையும் ஒரே சமையல் கூடமாக மாற்றுங்கள். எனக்கும், உங்களுக்கும் ஒரே சமையலறையில் உணவு தயாரியுங்கள் என்கிறார். (பலத்த கைத்தட்டல்). ஒருமுறை தமிழ்நாட்டுக்கு அவர் வந்திருந்த போது, ஒரு கிரைண்டர் தயாரிக்கும் தொழிற்சாலையுடைய நிறுவனர் அவருக்கு ஒரு கிரைண்டரை அன்பளிப்பு செய்கிறார்.
அதை இலவசமாக ஏற்க மறுத்து அதற்கான காசோலையை அவருக்கு கொடுக்கிறார். சிறிது நாளைக்கு பிறகு அந்த காசோலை தனது வங்கி கணக்கில் பரிமாற்றம் செய்யப்படவில்லை என அறிகிறார். உடனடியாக அவர்களுக்கு தகவல் கொடுத்து; அந்த காசோலையை ஏற்றுக் கொள்ளாவிட்டால் கிரைண்டரை திருப்பி அனுப்பி விடுவேன் என்கிறார். உடனடியாக அந்த தொழிலதிபர், அவருடைய பிடிவாதத்தின் நேர்மையை கருதி ஏற்றுக் கொள்கிறார். (கைத்தட்டல்)அவரது குடும்பத்தினர் ராமேஸ்வரத்திலிருந்து அவரை பார்க்க ரயிலில் புறப்பட்டு டெல்லி வந்தார்கள். அவர்கள் விமானத்தில் வரவில்லை என்பதை இங்கே கவனிக்க வேண்டும்.
அவர்கள் தன்னுடன் ஜனாதிபதி மாளிகையில் சில நாட்கள் தங்கி விட்டு புறப்பட்ட பிறகு; அவர்கள் எத்தனை நாட்கள் அங்கு தங்கினார்களோ, அத்தனை நாட்களுக்கு அவர்கள் சாப்பிட்ட உணவு உட்பட அனைத்திற்கும் ஆன செலவை தனது சொந்த பணத்திலிருந்து கொடுத்து விடுகிறார். ஜனாதிபதி மாளிகையில் உறவினர்கள் தங்கிச் செல்ல சட்டம் அனுமதித்தாலும்; அதற்காக பொது நிதியில் செலவு செய்வதை அவரது மனசாட்சி ஏற்றுக்கொள்ளவில்லை (கைதட்டல்இப்படிப்பட்ட மனிதருக்கு இந்த அரங்கத்திலே சிறப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.இந்த உமறுப்புலவர் அரங்கில், நான் மூன்றாவது முறையாக நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன். ஐம்பெரும் காப்பியங்கள் இயற்றப்பட்ட பிறகு தமிழில் அடுத்த ஐந்து நூற்றாண்டுகளுக்கு எந்த காப்பியங்களும் இயற்றப்படவில்லை.அந்த குறையை உமறுப்புலவர் அவர்கள் சீராபுராணத்தை இயற்றியதின் மூலமாக தீர்த்து வைத்தார்.
அவரது பெயரால் இந்த அரங்கத்தை அமைத்திருப்பதற்கு சிங்கப்பூர் அரசுக்கு நன்றி சொல்ல வேண்டும். இங்கு தான் இந்தியாவுக்கு வெளியே, தென்கிழக்கு ஆசியாவில் தமிழுக்கென்று ஒரு நிலையம் இருக்கிறது. இங்கு நாம் அப்துல் கலாம் அவர்களை பேசும் போது, சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ அவர்களை பற்றியும் பேச வேண்டும். நான் சட்டமன்றத்திலேயே அவரைப் பற்றி பேசி உள்ளேன். ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால் பிரதமர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என எல்லோருக்கும் தேவைக்கு அதிகமான சம்பளத்தை கொடுக்க வேண்டும் என்று கூறி அதை இங்கு செயல்படுத்தினார்.
இன்று சிங்கப்பூரில் உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இவர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. ஊழல் ஒழிப்புக்கு இதுதான் முதல் படி.இதை நான் சுட்டிக்காட்டி சட்டமன்றத்தில் பேசினேன். உங்களையும், எங்களையும் தமிழ் இணைக்கிறது. ஆனால் நாங்கள் இந்தியர்கள். நீங்கள் சிங்கப்பூரர்கள்.நீங்கள் அப்துல் கலாமுக்கு சிங்கப்பூரில் விழா எடுத்திருப்பது போல நாங்களும் லீ குவான் யூ அவர்களுக்கு எங்கள் நாட்டில் விழா எடுப்போம். (பலத்த கைத்தட்டல்)இவ்வாறு அவர் உரையாற்றினார்.
அவர் உரையாற்றி முடிந்த பிறகு விஞ்ஞானி Dr. மயில்சாமி அண்ணாதுரை, சஞ்சீவ் குமார் திவாரி MP., மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் எழுந்து வந்து கைக்கொடுத்து பாராட்டினர். சஞ்சீவ் குமார் திவாரி MP அடுத்த முறை இங்கு வரும்போது தனக்கு தகவலை தெரியப்படுத்துங்கள் என்றும், சென்னை வரும் போது தான் சந்திப்பதாகவும் கூறினார். நிகழ்ச்சி முடிந்ததும் அரங்கில் இருந்தவர்கள் சூழ்ந்துக் கொண்டு அவருடன் தற்படம் (selfi) எடுப்பதில் ஆர்வம் காட்டினர். பலரும் அவரது சட்டமன்ற உரைகளுக்கு பாராட்டுகளை கூறினர்.
அப்துல் கலாம் லட்சிய கழகத்தின் தலைவர் திரு. அருமை சந்திரன் அவர்களும், நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் சின்னு (எ) பழனி அவர்களும், அதன் பொதுக்குழு உறுப்பினர் திரு. இறைமதியழகன் அவர்களும், அவர்களின் குழுவினரும் நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர்.நிகழ்ச்சி முடிந்த பிறகும் கூட தமிழ்நாட்டைச் சேர்ந்த எண்ணற்ற தொழிலாளர்களும், வணிகர்களும் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களை தேடி வந்து தங்களுடைய அன்பை வெளிப்படுத்தினர்.முன்கூட்டியே விளம்பரம் செய்திருந்தால் இன்னும் ஏராளமானோர் வந்திருப்பார்கள் என்றும் தெரிவித்தனர்.நிகழ்ச்சியில் திரளான மனிதநேய சொந்தங்கள் குடும்பத்துடன் வந்திருந்தது நிகழ்ச்சி ஏற்பாட்டளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.அரங்கம் முழுமையாக நிறைந்ததால் விழா குழுவினர் எந்த உற்சாகத்துடன் இருந்தனர்.
