”அமிதாப் பச்சனை இயக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்”; ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

பிரபல இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ’3’ மற்றும் ’வை ராஜா வை’ ஆகிய படங்களுக்குப் பிறகு மிக நீண்டகாலமாகப் படம் இயக்காமலிருந்து வந்தார். பின்பு, அவர் ’லால் சலாம்’ படத்தை இயக்கியிருந்தார். இந்நிலையில், தற்போது அவர் மீண்டும் படம் இயக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

ஜெய் கதாநாயகனாக நடிக்கும் அந்த படத்திற்கு, ’டெக்ஸ்லா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ’கண்ணன் ரவி குரூப்ஸ்’ தயாரிக்கும் இப்படத்தில், பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

இதனிடையே, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது தந்தை ரஜினிகாந்த் மூலமாக அமிதாப்பச்சனை அணுகி, படத்தின் கதை மற்றும் அவரது கதாபாத்திரம் குறித்து நேரடியாக விவரித்துள்ளார். ரஜினிகாந்த் குடும்பத்தின் மீதுள்ள தனிப்பட்ட மரியாதையின் காரணமாக, இந்தத் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பரிசீலிக்க அமிதாப்பச்சன் சம்மதித்துள்ளதாகக் கூறப்படுகிறது  

எனினும், ஒருவேளை அமிதாப்பச்சன் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால், தனக்கான காட்சிகளை முழுமையாக மும்பையிலேயே படமாக்க வேண்டும் என்றும், தனது வசதிக்கேற்ப படப்பிடிப்பு அட்டவணையை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவருக்கு 15 நாட்கள் கால்ஷீட் கேட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த செய்தி ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.