திருப்பூர்: தாராபுரத்தில் இடைத்தேர்தல் நடந்தபோது, முதல்வர் விஜயின், ‘ரோடு ஷோ’வில் இடையூறு செய்ததாக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா, அவரது கணவர் உட்பட 9 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டசபை தொகுதியில், சமீபத்தில் இடைத்தேர்தல் நடந்தபோது, முதல்வர் விஜய், ‘ரோடு ஷோ’ வாயிலாக, ஓட்டு சேகரித்தபோது, அதே வழியில், நா.த.க., வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர்.
வேறு வழியில் செல்லுமாறு போலீசார் கூறியதற்கு, அவர்கள் வாக்குவாதம் செய்ததால், போலீசார் அவர்களை வேனில் ஏற்றி சென்று, பின் விடுவித்தனர். முதல்வர் ரோடு ஷோவில் இடையூறு செய்தது, போலீசாருடன் வாக்குவாதம் செய்தது, தொண்டரை தாக்கியது உட்பட ஐந்து பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், கார்த்திகா, அவரது கணவர் முருகு சந்திரகுமார் உட்பட ஒன்பது பேரை நேற்று அதிகாலை போலீசார் கைது செய்தனர். போலீஸ் ஸ்டேஷன் முன்பு நா.த.க.,வினர் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கைதானவர்களை போட்டோ எடுக்க விடாமல், பத்திரிகையாளர்களை போலீசார் தடுத்தனர்.
விளாங்குறிச்சியில் உள்ள வீட்டில் கைது செய்யப்பட்ட கார்த்திகா, பரிசோதனைக்காக தாராபுரம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு, கார்த்திகா கூறுகையில், “கள்ளச்சந்தையில் சாராயம் விற்பவர்கள் கூட தைரியமாக உள்ளனர். இறுதிகட்ட பிரசார நாளில், வேட்பாளராக ஓட்டு சேகரிக்க உரிமை இல்லையா? இரவு உடையில் இருந்த என்னையும், என் கணவரையும், அதிகாலை 5:00 மணிக்கு போலீசார் கைது செய்துள்ளனர்,’’ என்றார்.
