மும்பை:
மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்க வெ ளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவும், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் பங்கேற்றனர்.
மார்கோ ரூபியோ பேசியதாவது:
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையில், தேசிய நலன்களை வரையறுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த அடிப்படை விஷயங்களில் இருக்கும் ஒருங்கிணைப்பு அசாதாரணமானது.
புவி சார் அரசியல், பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் வணிகள் ஆகியவற்றில்நாம் இப்போது எடுக்கும் முடிவுகள் இன்னும் பிறக்காத மக்களை பாதிக்கும் நம்மால் முழுமையாக புரிந்து கொள்ளவோ அல்லது பாராட்டவோ முடியாத வழிகளில் இந்த உலகத்தை வரையறுக்கும் என்றார்.
ஜெய்சங்கர் பேசியதாவது:
இந்தியாவின் நிதி தலைநகராக மும்பை திகழ்கிறது. ஆனால், அதனையும் தாண்டி இந்நகருக்கு பெருமை உள்ளது. கற்றலுக்கான மையமாகவும், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்திற்கான மையம் ஆகவும் திகழ்கிறது.
இந்தியா அமெரிக்கா இடையிலான உறவு உண்மையில் நீண்ட தூரம் பயணித்துள்ளது. இந்தியாவின் சுதந்திர போராட்டத்திற்கு பல அமெரிக்கர்கள் ஆதரவு அளித்ததாக வரலாறு பதிவு செய்துள்ளது. உள்கட்டமைப்பு, கல்வி, உணவு, விவசாயம், தொழில்நுட்பம் என எதுவாக இருந்தாலும், நமது ஒத்துழைப்பு இந்தியாவின் வளர்ச்சியில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்திய திறமைகளும், இந்திய திறன்களும் அமெரிக்காவில் தொழில்நுட்ப சகாப்தத்தை வடிவமைக்க உதவின. எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் சிவில் விமான போக்குவரத்து ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி உண்மையில் வியக்கத்தக்கதாக உள்ளது.
மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மார்கோ ரூபியோ மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதை பாராட்டுகிறேன். முக்கிய குற்றவாளியான தஹாவர் உசேன் ராணாவை நாடு கடத்தும் அமெரிக்காவின் முடிவை இந்தியா வரவேற்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான நம்மை தற்காத்து கொள்ளும் நமது உரிமையில் இந்தியா தெளிவாக உள்ளது. பயங்கரவாதத்தின் மீது சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறையை நமது கூட்டாளிகளும் கடைபிடிப்பார்கள் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
