சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாகவும், அதன் விளைவாக தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கப் போவதாகவும், சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நேற்று சிவகங்கை மாவட்டம் அமராவதி புதுார், பேராட்டுக்கோட்டை; ராமநாதபுரம் மாவட்டம் மங்களக்குடி பகுதிகளில் தலா 9 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை; நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு; திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் ஆகிய இடங்களில் தலா 8 செ.மீ., மழை பெய்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தமிழக கடலோரப் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்தில், அதாவது இன்று தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாக வாய்ப்புள்ளது.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவான பின், அதன் நகர்வுகள் அடிப்படையில் வடகிழக்கு பருவமழை, அடுத்து வரும் நாட்களில் தீவிரமடையுமா என்பது தெரிய வரும். துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான ‘ஆரஞ்ச் அலெர்ட்’ அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள், காரைக்காலில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. பிற மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும்; ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்தம் உருவாக உள்ளதால், தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல், வரும் 25ம் தேதி வரை கன மழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
