சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. இன்று (21.10.2026) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “இவர்கள் (த.வெ.க.) ஆட்சிக்கு வந்த பிறகுதான் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் எதிரான வன்முறைகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. ஒரு விதத்தில், இவர்களுடைய கட்சியில் இருக்கக்கூடியவர்கள் பெண்களுக்கு எதிராக சோசியல் மீடியாவில் போடக்கூடிய பதிவுகளும், பெண்களுக்கு எதிரான வன்முறையை அதிகமாகத் தூண்டக்கூடிய ஒன்றாக மாறிக்கொண்டிருக்கின்றன.
அதே நேரத்தில், இந்த (த.வெ.க.) ஆட்சி வந்த பிறகு ஒவ்வொரு நாளும் குற்றச் சம்பவங்களை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், முதலமைச்சர் விஜய்யின் நேரடிப் பார்வையில் இருக்கக்கூடிய, அவர் கவனிக்கக்கூடிய துறையாக இருக்கக்கூடிய காவல்துறையில் இந்தக் குற்றச் செயல்களைக் குறைப்பதற்கோ, தடுத்து நிறுத்துவதற்கோ எந்த நடவடிக்கையும் இல்லை. சட்டமன்றத்தில் இதைப் பற்றிக் கேட்டால், பஞ்ச் டயலாக் பேசிவிட்டு, கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் வேறு எதையோ பேசிவிட்டு முதலமைச்சர் விஜய் அங்கிருந்து கிளம்பிப் போகிறார். இதுதான் ஜனநாயகமா? இதற்காகத்தான் மக்கள் அவர்களுக்கு வாக்களித்துத் தேர்ந்தெடுக்கிறார்களா?
ஒரு குழந்தை காணாமல் போய் இத்தனை நாட்கள் ஆகின்றன. எந்த நடவடிக்கையும் இல்லை. காணாமல் போன ஒரு செவிலியரைப் பற்றிப் புகார் அளிக்கச் சென்றவர்களிடமே, அங்கிருக்கக்கூடிய காவல்துறையினர் தவறாகப் பேசக்கூடிய நிலை இருக்கிறது. ஆனால், இதையெல்லாம் கண்டுகொள்ளாமல், கவலையே படாமல் ஒரு முதலமைச்சர் எப்படி இங்கே ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார்?. எந்த ஆணும் ஒரு பெண்ணுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய அவசியமே கிடையாது. அண்ணனாக இருக்க வேண்டாம்; யாராகவும் இருக்க வேண்டாம். நீங்கள் உங்கள் கடமையைச் செய்தாலே போதும். ‘நான் அண்ணனாக இருக்கிறேன், சீர்கொடுக்கிறேன்’ என்றெல்லாம் சொல்லி இப்போது பெண்களை ஏமாற்றியது போதும். நீங்கள் உங்கள் கடமையைச் செய்யுங்கள். காவல்துறை தனது கடமையைச் செய்யக்கூடிய அளவுக்கு உங்கள் நிர்வாகத் திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள்” எனத் தெரிவித்தார்.
